இனவாத கருத்தால் மரபணு முன்னோடியின் பட்டம் பறிப்பு

டி.என்.ஏ ஆய்வின் முன்னோடியான அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வொட்ஸன் இனவாத கருத்தை வெளியிட்டதை அடுத்து அவரது கெளரவ பட்டங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

நோபல் விருது வென்றவரான வொட்ஸன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், நுண்ணறிவு சோதனைகளில் கறுப்பு மற்றும் வெள்ளை இனத்தவர்களிடையே சராசரியான ஒரு வித்தியாசத்தை மரபணு ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த கருத்து நம்பகமற்றது மற்றும் பொறுப்பற்றது என்று கோல்ட் ஸ்பிங் ஹார்பர் ஆய்வுகூடன் குறிப்பிட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு வொட்ஸன் இதேபோன்ற கருத்தை வெளியிட்டு பின்னர் அதற்காக மன்னிப்பு கேட்டிருந்தார். 1953இல் டி.என்.ஏவின் இரட்டை சுருள் அமைப்பை கண்டுபிடித்ததற்காக 90 வயது வொட்ஸன் 1962 இல் மொரிஸ் வில்கின்ஸ் மற்றும் பிரான்சிஸ் கிரிக் உடன் நோபல் பரிசை பகிர்ந்து கொண்டார்.

இனம் தொடர்பான தனது கருத்தால் விஞ்ஞான சமூகத்தால் ஒடுக்கப்பட்டதாகக் கூறி அவர் தனது நோபல் விருது தங்கப்பதக்கத்தை 2014 ஆம் ஆண்டு விற்பனை செய்தார். வாகன விபத்து ஒன்றுக்கு பின்னர் அவர் தற்போது மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tue, 01/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை