தமிழர் அதிகளவு தெரிவுசெய்யப்பட்டதால் முடிவுகளை இடைநிறுத்தவில்லை

தமிழர்கள் அதிகமாகத் தெரிவுசெய்யப்பட்டார்கள் என்பதற்காக அரச நிர்வாக சேவை போட்டிப் பரீட்சை முடிவுகள் எதுவும் இடைநிறுத்தப்படவில்லையென பொதுநிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையின் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னர் வெளியானதாலேயே அதன் முடிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நிர்வாக சேவைக்கான போட்டிப் பரீட்சையில் தமிழர்கள் அதிகம் தெரிவானதால் அந்தப் பரீட்சை முடிவுகளை இடைநிறுத்தி, அதனை இரத்துச் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. பரீட்சையில் தேர்ச்சிபெற்றவர்களின் பெயர் விபரங்கள் அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு, நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக்கள் விடுக்கப்பட்ட நிலையிலேயே பரீட்சை முடிவுகள் இடைநிறுத்தப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினம் சிவஞானம் சிறிதரன் பாராளுமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டினார்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார, இதுதொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதுடன், விசாரணைகளின் பின்னர் எவருக்கும் அநீதி இழைக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

எந்தவொரு இனத்தவருக்கும் அநீதி ஏற்படும் வகையில் அரசாங்கம் செயற்படாது. பரீட்சைக்கு முன்னர் வினாத்தாள் வெளியானதாலேயே அது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றன. சிறிதரன் எம்பி முன்வைத்த குற்றச்சாட்டில் உண்மை இல்லையென்றும் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, நேர்முகப் பரீட்சைக்கு அழைப்புக்கள் கிடைத்த பின்னரே பரீட்சை முடிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. எனினும், பரீட்சையில் எந்தவித மோசடியும் இடம்பெறவில்லையென பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. தமிழ் மொழிமூலமானவர்கள் அதிகமாகத் தெரிவானதால் பரீட்சை பெறுபேறுகளை இடைநிறுத்தி வைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Wed, 01/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை