படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு

ரூ. 250 மில்லியனை ஒதுக்க அமைச்சரவை அனுமதி

படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்குவதற்காக 250 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

விவசாய அமைச்சர் பி.ஹரிசன் அமைச்சரவைக்கு முன்வைத்த பத்திரத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கிணங்க தற்போது பாதிக்கப்பட்ட காணிகள் தொடர்பான சேதம் தொடர்பில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் பயிர்ச் செய்கை செய்யப்பட்ட காணியில் ஏக்கர் ஒன்றுக்கு 40,000 ரூபாவை வழங்க உத்தேசிக்கப்பட்டு சோள பயிர்ச் செய்கையாளர்களுக்கும் நட்டஈடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் ஹரிசன் தெரிவித்தார்.

பயிர்ச் செய்கை பாதிப்புக்கு இதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த நட்டஈட்டுக்கிணங்க முழுமையாக சேதமடைந்திந்த ஏழு வகை பயிர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டது போல் படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட காணிகளுக்கு சோளப் பயிர்ச் செய்கையாளர்களுக்கும் நட்டஈடு வழங்குவதற்கு விவசாயத் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். படைப்புழுவை ஒழிப்பதற்காக ஏற்கனவே விவசாய அமைச்சு 118 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் மேற்படி பாதிப்பு விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

படைப்புழுவை கட்டுப்படுத்தும் செயற்பாட்டிற்கு ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டு அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். அத்துடன் மேற்படி செயலணி வாரம்தோறும் கூடி மேற்படி பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு தீர்மானங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

படைப்புழு கட்டுப்படுத்தல் தொடர்பில் நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கான வழிகாட்டல்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கி வருகின்றார். பிரதமர் தலைமையில் கூடிய பாராளுமன்ற குழு கூட்டத்தின்போதும் அது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொடுப்பதற்கான பணிப்புரையை பிரதமர் நிதியமைச்சுக்கு வழங்கியுள்ளார்.

படைப்புழு பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. இதற்காக அரசாங்கத்தினால் உச்ச அளவு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 01/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை