லயன் ஏர் விமானத்தின் ‘கறுப்புப் பெட்டி’ மீட்பு

ஜாவா கடலில் மூழ்கிய லயன் ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டியான விமானி அறைக் குரல் பதிவுப் பெட்டியை இந்தோனேசியா கண்டுபிடித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு மேல் அது தேடப்பட்டு வந்தது.

கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி ஜாவா கடலில் மூழ்கிய லயன் ஏர் நிறுவனத்தின் போயிங் 737 மெக்ஸ் ரக விமானத்தில் இருந்த 189 பேரும் உயிரிழந்தனர்.

செம்மஞ்சள் நிறத்திலான இந்தப் பெட்டி முதலாவது கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் மீட்கப்பட்டுள்ளது. விமானத் தரவுகள் அடங்கிய முதல் கறுப்புப் பெட்டி கடந்த நவம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குரல் பதிவு இரண்டாக உடைந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது. “தொடர்ந்தும் அது பயன் தரும் என்று நம்புகிறோம்” என்று இந்தோனேசிய போக்குவரத்து பாதுகாப்பு பிரிவின் துணைத் தலைவர் ஹார்யோ சட்மிகோ குறிப்பிட்டுள்ளார்.

இந்த கறுப்புப் பெட்டி இருந்த இடத்தில் இருந்து மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.

விமானம் தொடர்பை இழப்பதற்கு முன் விமானத்தை மீண்டும் விமான நிலையத்திற்கு திருப்பி வர விமானி அனுமதி கோரி இருந்தார். இந்நிலையில் விமானி அறையின் உரையாடல் அடங்கிய இந்தக் கறுப்புப் பெட்டி விபாத்திற்கான காரணத்தை கண்டறிய உதவும் என்று நம்பப்படுகிறது.

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருந்ததை விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனினும் கடலில் மூழ்கிய விமானத்தின் பிரதான உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. போயிங் 737 மெக்ஸ ரக விமானம் விபத்துக்குள்ளானது இதுவே முதல்முறையாகும்.

Tue, 01/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை