குர்திஷ் ஆதரவாக துருக்கி மீது டிரம்ப் கடுமையான எச்சரிக்கை

‘பொருளாதார பேரழிவு’ நிகழும்

அமெரிக்க துருப்புகள் சிரியாவில் இருந்து வெளியேற திட்டமிட்டிருக்கும் நிலையில் குர்திஷ் படைகள் மீது துருக்கி தாக்குதல் நடத்தினால் ‘துருக்கி பொருளாதார பேரழிவை’ சந்திக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட இரு ட்விட்டர் பதிவுகளில், குர்திஷ்கள் துருக்கியை ஆத்திரமூட்டுவதையும் ஏற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவுக்கு எதிராக அமெரிக்கப் படை குர்திஷ் போராளிகளுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது. எனினும் இந்த குர்திஷ் போராளிகளை துருக்கி தீவிரவாதிகளாக கருதுகிறது.

சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது துருக்கி இராணுவம் தாக்குதல் நடத்தினால், பொருளாதார ரீதியாக துருக்கி நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்துவோம் என்றும், 20 மைல் சுற்றளவுக்கு பாதுகாப்பு மண்டலம் உருவாக்கப்படும் என்றும் டிரம்ப் ட்விட்டரில் எச்சரித்திருந்தார்.

சிரியாவில் இருந்து துருப்புகளை வெளியேற்றும் தனது முடிவுக்கு கடும் விமர்சனங்கள் வெளியாகும் சூழலிலேயே டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

எனினும் சிரியாவில் இருந்து தனது சில இராணுவம் உபகரணங்களை வாபஸ் பெறுவதை அமெரிக்கா கடந்த வாரம் ஆரம்பித்துள்ளது. எனினும் அங்கு தொடர்ந்தும் அமெரிக்க துருப்புகள் நிலைகொண்டுள்ளது.

வடக்கு சிரியாவில் சுமார் 2000 அமெரிக்க படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். குர்திஷ் போராளிகளுக்கு பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கவே 2015 ஆம் ஆண்டு ஒபாமா நிர்வாகம் இந்த துருப்புகளை சிரியாவுக்கு அனுப்பியது.

துருக்கி மீதான புதிய தடைகள் குறித்த எச்சரிக்கையை அடுத்து துருக்கி லிரா மதிப்பு நேற்று 1.1 வீதத்தால் சரிவு கண்டுள்ளது.

அமெரிக்க போதகர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டது தொடர்பில் துருக்கி மீது கடந்த ஒகஸ்டில் அமெரிக்கா தடைகளை கொண்டுவந்தது.

இந்த பதற்றத்தால் டொலருக்கு நிகரான துருக்கி நாணயம் பெரும் வீழ்ச்சி கண்டிருந்தது.

எனினும் துருக்கி நீதிமன்றம் அந்த கிறிஸ்தவ மதப்போதகரை விடுதலை செய்ததை அடுத்து பதற்றம் தணிந்தது.

எனினும் குர்திஷ் குழுவுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவது குறித்து கடும் கோபத்தை வெளியிட்ட துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான், அந்தக் குழுவை அழித்துவிடுவதாக சூளுரைத்தார்.

குர்திஷ் போராளிகள் துருக்கி நாட்டு எல்லையை ஒட்டி வடக்கு சிரியாவின் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, அந்தப் போராளிகளுக்கு எதிராக துருக்கி தனது நாட்டு எல்லையில் படைகளை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு சிரியாவில் துருக்கி 2016 மற்றும் 2018 இல் முறையே ஐ.எஸ் மற்றும் குர்திஷ்களுக்கு எதிராக படை நடவடிக்கையை மேற்கொண்டது. இதன்போது 2018 ஆரம்பத்தில் துருக்கி ஆதரவு சிரிய கிளர்ச்சியாளர்கள் குர்திஷ் போராளிகளின் வடமேற்கு அப்ரினை கைப்பற்றியது.

தனது கடைசி கோட்டையாக இத்லிப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கும் சிரிய அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கும் துருக்கி ஆதரவு அளித்து வருகிறது. அங்கு மோதல் தடுப்பு வலயம் ஒன்றை நிறுவுவதற்கு சிரிய அரசின் நட்பு நாடான ரஷ்யாவுடனும் உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது.

Tue, 01/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை