உலக உணவுத் திட்டத்தின் பலஸ்தீன உதவிகள் குறைப்பு

நிதிப் பற்றாக்குறை காரணமாக உலக உணவுத் திட்டம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் தமது சில பலஸ்தீன பயனாளிகளுக்கான உதவிகளை குறைத்து அல்லது இடை நிறுத்தியுள்ளது.

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் சுமார் 27,000 பலஸ்தீனர்களுக்கு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஐக்கிய நாடுகள் திட்டத்தின் மூலமான உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படுவதில்லை என்று அந்த அமைப்பின் பலஸ்தீன பகுதிகளுக்கான பணிப்பாளர் ஸ்டீபன் கீர்னி குறிப்பிட்டுள்ளார்.

காசாவின் 110,000 பேர் உட்பட மேலும் 168,000 பேருக்கு வழக்கமான அளவில் 80 வீதமே வழங்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் நான்கு ஆண்டுகளாக நன்கொடைகள் படிப்படியாக குறைந்திருக்கும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் நிதி வெட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக உணவுத் திட்டம் 2018இல் காசாவின் 250,000 மக்களுக்கும் மேற்குக் கரையின் 110,000 பேருக்கும் உதவியது. இரண்டு மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் சுமார் 80 வீதத்தினர் சர்வதேச உதவிகளில் தங்கியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவிட்சர்லாந்திடம் இருந்து உலக உணவு திட்டம் கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி மேலதிக நிதியை கோரியபோதும் தொடர்ந்தும் நிதிப் பற்றாக்குறை நீடித்து வருகிறது. புதிய நன்கொடையாளர்களை எதிர்பார்த்திருப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பலஸ்தீன உதவிகளில் சுமார் 500 மில்லியன் டொலர்களை நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Tue, 01/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை