கென்ய ஹோட்டல் மீது தாக்குதல்: 14 பேர் பலி

கென்ய தலைநகர் நைரோபியின் ஹோட்டல் வளாகம் ஒன்றில் 19 மணி நேரம் நீடித்த முற்றுகை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அனைத்து துப்பாக்கிதாரிகளும் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி உஹுரு கன்யாட்டா அறிவித்துள்ளார்.

அல் ஷபாப் ஆயுதக் குழுவினால் பொறுப்பேற்கப்பட்ட இந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதாக தேசிய தொலைக்காட்சி ஒன்றில் நேற்று உரையாற்றிய கென்யாட்ட குறிப்பிட்டார். கொல்லப்பட்டவர்களில் ஒரு அமெரிக்க நாட்டவரும் உள்ளார்.

இந்த ஹோட்டலில் இருந்து 700க்கும் அதிகமான பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். “டுசில் வளாகத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்து தீவிரவாதிகளும் ஒழிக்கப்பட்டுள்ளனர்” என்று கென்யாட்டா குறிப்பிட்டார்.

எனினும் எத்தனை தாக்குதல்தாரிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது உறுதி செய்யப்படவில்லை.

முன்னதாக இந்த முற்றுகை முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோதும் நேற்று காலையிலும் அங்கு துப்பாக்கிச் சண்டை மற்றும் வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வங்கி ஒன்றுக்கு வெளியில் மூன்று வாகனங்களை இலக்கு வைத்து குண்டுகள் வெடித்தது மற்றும் ஹோட்டல் வரவேற்பு அறையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுடன் ஒருங்கிணைந்த தாக்குதல் ஆரம்பமானதாக கென்ய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருக்கும் சோமாலியாவை தளமாகக் கொண்ட அல் ஷபாப், அண்மைக் காலத்தில் கென்யா மீது தாக்குதல்களை அதிகரித்துள்ளது. அல் ஷபாபுக்கு எதிராக கென்யா தனது துருப்புகளை சோமாலியாவுக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 01/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை