‘ஹுவாவி’ மீது அமெரிக்கா குற்றவியல் குற்றச்சாட்டுகள்

சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவி, அதன் இரண்டு துணை நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி மெங்வென்சூ மீது அமெரிக்க நீதித் துறை குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

அந்த நிறுவத்தின் வர்த்தகங்களில் வங்கிகளை தவறாக வழி நடத்தியதாகவும் ஈரான் மீதான அமெரிக்காவின் தடைகளை மீறியதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதோடு டீ-மொபைலில் இருந்து வர்த்தக இரகசியங்களை திருடியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் ஏற்கனவே வர்த்தக போர் ஒன்று இடம்பெற்று வரும் நிலையில் இந்த விடயம் இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகலை மேலும் அதிகரிப்பதாக உள்ளது.

தாம் எந்த தவறும் செய்யவில்லை என்று ஹுவாவி நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. மெங் வென்சூவும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். மெங் ஈரான் மீதான தமது தடைகளை மீறியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. அதையடுத்து, அமெரிக்கா கேட்டுக்கொண்டதால் கடந்த மாதம் கனடா அவரைக் கைது செய்தது.

“பல ஆண்டுகளாக, சீன நிறுவனங்கள் எங்கள் ஏற்றுமதிச் சட்டங்களை உடைத்ததுடன், எங்கள் தடைகளையும் மீறி அமெரிக்க நிதியமைப்பை பயன்படுத்தி தங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்தனர். இது அதற்கு முடிவாக இருக்கும்” என்று அமெரிக்க வணிகத்துறை செயலாளர் வில்பர் ரோஸ் கூறியுள்ளார்.

ஹுவாவி உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்புக் கருவிகள் உற்பத்தி மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்று. அண்மையில் ஆப்பிள் நிறுவனத்தை முந்திச் சென்ற இந்த நிறுவனம் தற்போது உலக அளவில் சம்சுங்குக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய திறன் பேசி (ஸ்மார்ட்போன்) தயாரிப்பு நிறுவனமாக உள்ளது.

ஹுவாவியின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமது உளவுத் திறனை சீனா அதிகரித்துக்கொள்ளும் என்ற கவலை அமெரிக்காவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் உள்ளது. ஆனால், தங்கள் நிறுவனத்தின் மீது சீன அரசுக் கட்டுப்பாடு ஏதும் இல்லை என்று அது மறுத்து வருகிறது.

Wed, 01/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை