நைக்கி பாதணிகளை திரும்பப்பெற கோரிக்கை

விளையாட்டுக்கான பாதணிகளில் இறைவனின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாகக் கூறி நைக்கி நிறுவனத்திற்கு அதிகமான முஸ்லிம்களிடம் இருந்து கண்டனம் வெளியாகியுள்ளது.

நைக்கி நிறுவனத்தின் புதிய ரக விளையாட்டு பாதணியான ‘ஏர் மேக்ஸ் 270’ இல் அரபு எழுத்துக்களில் இறைவன் எனப் பொருள்படும் ‘அல்லாஹ்’ என்று எழுதப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து குறிப்பிட்ட ரக பாதணிகளை திரும்பப் பெற வேண்டும் என்று கூறி நைக்கி நிறுவனத்திற்கு மனு ஒன்று உருவாக்கப்பட்டு கையெழுத்து வேட்டை இடம்பெற்று வருகிறது.

“நைக்கி தனது பாதணியில் இறைவனின் பெயரை பொறிக்க அனுமதித்திருப்பது மூர்க்கத்தனமானது மற்றும் பயங்கரமானது. இது முஸ்லிம்களுக்கு அருவருப்பான மற்றும் அவமரியாதையான செயல் இஸ்லாத்தை அவமதிப்பதாகும்” என்று அந்த மனு வில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நைக்கி வெளியிட்டிருக்கும் உத்தியோகபூர்வ அறிவிப்பில், “நைக்கி அனைத்து மதங்களையும் மதிப்பதோடு இது பற்றி தீவிரமாக அவதானம் செலுத்தும். நைக்கியின் ஏர் மேக்ஸ் வர்த்தகக் குறியீட்டை பிரதிநிதித்துவப் படுத்தி ஏர் மேக்ஸ் சின்னம் உருவாக்கப்பட்டிருந்தது. வேறு எந்த நோக்கம் கொண்ட அர்த்தமோ உருவமைப்போ பற்றி தெரிந்திருக்கவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

Wed, 01/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை