மட்டு. கல்லடி பாலத்திலிருந்து குதித்து இளைஞன் தற்கொலை

மட்டக்களப்பு, பழைய கல்லடிப்பாலத்திலிருந்து குதித்து இளைஞன் ஒருவன் நேற்று (27) தற்கொலை செய்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இந்த இளைஞன் பாலத்துக்கருகில் அதனைப் போட்டுவிட்டு திடீரென வாவியினுள் குதித்ததாக தெரிவித்த பொலிஸார், அவருடைய சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். நேற்று பிற்பகல் 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இவர் பாலத்திலிருந்து வாவியினுள் குதித்து தற்கொலைக்கு முயல்வதை கண்ட, மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொருவர் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதோடு, அவர் வந்த மோட்டார் சைக்கிளையும் போட்டுவிட்டு வாவியினுள் குதித்துள்ளார். எனினும், அவர் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளார். செய்தி அச்சுக்குப் போகும் வரை, தற்கொலை செய்து கொண்டவரின் சடலம் மீட்கப்படவில்லை.  பிந்திக் கிடைத்த தகவலின் படி, தற்கொலை செய்து கொண்டுள்ள இளைஞன் பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் வசிக்கும் தனுஷ் என தெரியவந்துள்ளது.

தற்கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. என்றாலும், காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இத் தற்கொலை முயற்சியினால் கல்லடிப்பாலத்தருகில் பதற்றம் நிலவி வருவதுடன், கல்லடிப்பாலம் தற்கொலைத் தளமாக மாறிவருவதாகவும் இதுவரை மட்டக்களப்பில் 77 தற்கொலைகள் இடம் பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

(ஆரையம்பதி தினகரன் நிருபர்)   

Mon, 01/28/2019 - 09:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை