மார்ச் இறுதியில் நாடு முழுவதும் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவை

சுவசெரிய திட்டத்தை இவ்வருட மார்ச் இறுதியில் நாடுபூராகவும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக சுவசெரிய திட்ட முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.  

இந்திய-, இலங்கை நீண்டகால நட்புறவை மேலும் பலப்படுத்தும் நோக்கில் 2016 ம் ஆண்டு இந்த நாட்டிற்கு வழங்கப்பட்ட சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவை மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தை கேந்திரமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் சாதாரண மக்கள் பெரும் நன்மையடைந்து வருகின்றனர். வெளியிடங்களிலிருந்து புறக்கோட்டைக்கு வந்து 1990 இலக்கத்தை அழைப்பதன் மூலம் கொழும்பு தேசியவைத்தியசாலைக்கு இலகுவாக செல்லக் கூடியதாக இச்சேவையுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தினால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட திட்டமெனவும் இதனைக் குறிப்பிட முடியும்.  

இதன்படி 56 அம்பியூலன்ஸ் வண்டிகள் மேல் மாகாண மக்களுக்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.இதில் 22 வண்டிகள் கொழும்பு மாவட்டத்திலும், கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 17 வண்டிகளும் தென் மாகாணத்திற்கு 32 வண்டிகளும், வட மேல் மாகாணத்திற்கு வழங்கப்பட்ட வண்டிகள் 31ல், 13 வண்டிகள் சிலாபத்திற்கும், 17 வண்டிகள் குளியாப்பிட்டியிலும் சேவையில் ஈடுபட்டுள்ளன. வட மாகாணத்துக்கு 20 வண்டிகள் வழங்கப்பட்டபோது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இணையத்தளமூடாக வடக்கு மக்களுக்கு உரையாற்றினார்.  

நாடு பூராவும் 206 வண்டிகள் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் மாகாண மக்கள் தொகைக்கு ஏற்ப  வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 6000 க்கும். அதிகமான மக்கள் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவையை பெற்றுக்கொண்டுள்ளதாக சுவசெரிய திட்ட முகாமையாளர் கயான் சதுரங்க தெரிவித்தார்.  

 இந்த சேவையை பெற்றுக்கொண்ட கர்ப்பிணிப் பெண்களில் 21 பேர் இந்த வண்டியிலேயே குழந்தையை பிரசவித்துள்ளனர். இந்த அம்பியூலன்ஸ் வண்டியில், அவசர வைத்திய தொழில்நுட்ப அதிகாரியொருவரும், சாரதியும் பயிற்சியளிக்கப்படுகின்றனர்.  

தற்போது இந்த பணியில் 1500 பேர் ஈடுபட்டுள்ளனர். 2019ம் ஆண்டு மார்ச் மாதமளவில் நாடு பூராவும் இத்திட்டத்தை விஸ்தரிப்பதன் மூலம் பணியாளர்கள் எண்ணிக்கை 2000 க்கும் அதிகமாகுமெனவும் அவர் தெரிவித்தார்.    

Mon, 01/28/2019 - 08:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை