பலஸ்தீன கைதிகளின் வசதிகளை மட்டுப்படுத்த இஸ்ரேல் புது திட்டம்

நீர் விநியோகம் மற்றும் குடும்பத்தினர் வருகையை மட்டுப்படுத்துவது உட்பட இஸ்ரேல் சிறையில் உள்ள பலஸ்தீன கைதிகளுக்கான சிறை வசதிகளை மேலும் மோசமாக்கும் திட்டம் ஒன்றை இஸ்ரேலிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கிலார்ட் ஏர்டன் அறிவித்துள்ளார்.

இஸ்ரேலின் மற்றொரு மனித உரிமை மீறல் என செயற்பாட்டாளர்கள் மற்றும் பலஸ்தீன தலைவர்கள் இதற்கு கடுமையான விமர்சனத்தை வெளியிட்டிருக்கும் நிலையில் இஸ்ரேலிய அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு பின் இந்த திட்டம் அடுத்த ஒருசில வாரங்களில் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் சிறைக்குள் சமைக்கும் உரிமை நீக்கப்பட்டு மற்றும் தொலைக்காட்சி பார்ப்பது கட்டுப்படுத்தப்படுவதோடு பலஸ்தீன அதிகார சபையின் நிதிகள் தடுக்கப்படும் என்று ஏர்டன் குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீன போராட்ட அமைப்பான ஹமாஸுடன் தொடர்புபட்ட கைதிகளின் குடும்பத்தினர் வருகை ஏற்கனவே தடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

உத்தியோகபூர்வ தரவுகளின்படி இஸ்ரேல் சிறையில் இருக்கும் பலஸ்தீன கைதிகளின் எண்ணிக்கை 5,500ஐ எட்டி இருப்பதோடு இதில் 230 சிறுவர்கள் மற்றும் 54 பெண்கள் அடங்குகின்றனர்.

இவர்களில் 1,800 பேருக்கு் மருத்துவ பராமரிப்பு தேவைப்படுவதோடு, சுமார் 700 பேர் மோசமான அல்லது நாட்பட்ட நோய்களுக்கு உட்பட்டிருப்பதாக உரிமைக் குழுக்கள் குறிப்பிட்டுள்ளன.

பெரும்பாலான பலஸ்தீன கைதிகள் தடுப்புக்காவலில் இருக்கும் காலத்தில் துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். சிறையில் உள்ள மோமசமான நிலை குறித்து உண்ணாவிரத போராட்டம் உட்பட அண்மைக் காலத்தில் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Fri, 01/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை