கொந்தளிப்பான மன்பிஜ்ஜில் இருந்து குர்திஷ் போராளிகள் வெளியேற்றம்

துருக்கியின் தாக்குதல் குறித்து குர்திஷ்கள் சிரிய அரசிடம் உதவி கோரிய நிலையில், துருக்கி எல்லையை ஒட்டிய மன்பிஜ் பிராந்தியத்தில் இருந்து நூற்றுக்கணக்கான குர்திஷ் போராளிகள் வாபஸ் பெற்றிருப்பதாக சிரிய அரசு குறிப்பிட்டுள்ளது.

“30க்கும் அதிகமான வாகனங்களுடன் குர்திஷ் போராளிகளின் வாகனத் தொடரணி ஒன்று மன்பிஜ் பிராந்தியத்தில் இருந்து வெளியேறி யூப்ரடிஸ் நதியின் கிழக்குக் கரையை நோக்கி பயணிக்கிறது” என்று சிரிய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

“சுமார் 400 குர்திஷ் போராளிகள் இதுவரை மன்பிஜ்ஜை விட்டு வெளியேறியுள்ளதை எம்மிடம் உள்ள தகவல்கள் காட்டுகின்றன” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயுதம் ஏந்திய போராளிகளை ஏற்றிய வாகனங்கள் பயணிக்கும் வீடியோ ஒன்று சிரிய பாதுகாப்பு அமைச்சின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போராளிகளில் சிலர் குர்திஷ் கொடியை அசைத்தபடி செல்கின்றனர்.

சிரியாவில் இருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேறும் திடீர் அறிவிப்பை அடுத்து சிரியாவின் பிரதான குர்திஷ் போராட்டக் குழுவான மக்கள் பாதுகாப்பு பிரிவு கடந்த வாரம் சிரிய அரசின் உதவியை கோரியது.

இந்த குர்திஷ் போராட்டக் குழு அமெரிக்காவின் உதவியுடன் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவிடம் இருந்து 2016 ஆம் ஆண்டு மன்பிஜ் பிராந்தியத்தை கைப்பற்றியது.

இந்நிலையில் அமெரிக்க துருப்புகள் வெளியேறும் அறிவிப்பால் குர்திஷ்கள் துருக்கியின் படை நடவடிக்கைக்கு முகம்கொடுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குர்திஷ் போராளிகளை துருக்கி தீவிரவாதிகளாக கருதுகிறது.

Fri, 01/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை