மேல் மாகாணத்தில் நடமாடும் நீதிமன்றங்கள்

நீதி அமைச்சரிடம் ஆளுநர் அசாத் சாலி கோரிக்ைக

மேல் மாகாணத்தில் நடமாடும் நீதிமன்றங்கள் சிலவற்றை அமைக்குமாறு நீதி அமைச்சரிடம் கோர இருப்பதாக மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்தார்.

வாகனமொன்றில் அமைக்கப்படும் இவ்வாறான நடமாடும் நீதிமன்றத்தினூடாக அதே இடத்தில் அபராதம் விதித்து வீதி ஒழுங்குகளை மீறும் குற்றச் செயல்களை மட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்த அவர், பாதசாரிகள் செய்யும் அவ்வாறான சட்ட மீறல்களுக்காக நடமாடும் நீதிமன்றங்களினூடாக அபராதம் விதிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்கவிற்கும் மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற ஊடக மாநாட்டில் நேற்று கருத்து தெரிவித்த போதே ஆளுநர் இதனை தெரிவித்தார்.

மாடுகள், நாய்கள் கூட வெள்ளை கோட்டில் வீதியை கடந்து செல்கையில் மனிதர்கள், நினைத்த இடங்களில் எல்லாம் வீதியை கடந்து செல்வதை கண்டுள்ளேன். அவர்களுக்கு அதே இடத்தில் அபராதம் விதித்தாவது திருத்த வேண்டும். இவ்வாறான செயற்பாட்டில் எந்த அரசியலும் பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேல்மாகாண பாடசாலை மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதை தடுப்பதற்கு சகல நடவடிக்கைகளும் எடுப்பேன். பாடசாலைகளுக்கு அருகில் போதைப் பொருள் விற்பனை நடைபெறுகிறது. இவற்றுடன் சில பெற்றோர்களுக்குக் கூட தொடர்பு இருக்கிறது. இது தொடர்பில் பொலிஸ் அடங்கலான பல்வேறு தரப்பினருடன் நான் ஆராய்ந்துள்ளேன். இதற்காக மத ஸ்தலங்களையும் இணைத்து பிள்ளைகளை மீட்க வேண்டும்.

பாடசாலை மாணவர்களை போதைப் பொருளில் இருந்து மீட்பது தொடர்பில் ஜனாதிபதி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். பாடசாலைகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பவர்களை கைது செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இதற்காக குழுக்களை அமைத்து துரித நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

வர்த்தக நகரமான கொழும்பில் பாதையோர வியாபாரம் காரணமாக வீதிகள் தடைப்பட்டுள்ளன. இது தொடர்பில் 1998 முதல் நான் கருத்து கூறி வருகிறேன். இதற்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க இருக்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம்

Tue, 01/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை