வயம்ப பல்கலைக்கழகத்தில் பகிடிவதை

14 மாணவர்கள் கைது; விளக்கமறியல்

வயம்ப பல்கலைக்கழகத்தின் குளியாப்பிட்டி வளாகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட 14சிரேஷ்ட மாணவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டி மஜிஸ்திரேட் நீதிபதி ஜனனி எஸ். விஜேதுங்க உத்தரவிட்டுள்ளார்.  

கடந்த 20ஆம் திகதி மேற்படி குளியாப்பிட்டி வளாகத்தில் வைத்து பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்திற்காக 14சிரேஷ்ட மாணவர்களை குளியாப்பிட்டி பொலிஸார் கைது செய்திருந்தனர். அதனையடுத்து மேற்படி மாணவர்கள் குளியாப்பிட்டி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  

கல்வி நிறுவனங்களில் பகிடிவதைகளை தடுப்பது தொடர்பான சட்டம் மற்றும் இலங்கை குற்றவியல் சட்டத்திற்கிணங்க சந்தேகத்தின் பேரில் மேற்படி மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.  

வயம்ப பல்கலைக்கழகத்தின் முதலாம் வருடத்திற்கு இணைந்த இரு மாணவர்கள் பகிடிவதைக்கு எதிரான முக்கிய நபர்கள் என்ற பேரில் கடந்த டிசம்பர் 26ம் திகதி பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து சிரேஷ்ட மாணவர்களால் தாக்கப்பட்டிருந்தனர்.  

மேற்படி தாக்குதலினால் காயமடைந்திருந்த இரு புதிய மாணவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனை பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தனர்.  

மேற்படி வழக்குடன் தொடர்புடைய மேலும் விபரங்கள் உள்ளடங்கிய அறிக்கையை அடுத்த வழக்கு விசாரணை தினத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி ஜனனி எஸ். வி​ஜேதுங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.  

மேற்படி வழக்கின் முறைப்பாட்டிற்கிணங்க குளியாப்பிட்டி பொலிஸ் முறைப்பாட்டு பொறுப்பதிகாரி ஆனந்த விக்கிரமரட்ண, ஜயந்த ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததுடன்சந்தேக நபர்களான மாணவர்கள் சார்பில் சட்டத்தரணிகளான சம்பிக்க லஷித குமார, உப்புல் அழகியவன்ன, தயானி எதிரிசிங்க ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் சார்பில் சட்டத்தரணிகளான அநுரசிறி திஸாநாயக்க சந்திரகீர்த்தி ரன்கோன் ஆகியோரும் ஆஜராகியிருந்தனர். (ஸ)

Wed, 01/23/2019 - 10:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை