கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிரான வழக்கு 31 இல் விசாரணை

மெதமுலன டி.ஏ. ராஜபக்‌ஷ நூதனசாலை மற்றும் ஞாபகார்த்த தூபி என்பன பொதுமக்கள் நிதியில் நிர்மாணிக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் ஆறு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசேட நீதிமன்றத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

டி.ஏ. ராஜபக்‌ஷ நூதனசாலை தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு கொழும்பு விசேட நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கம் இல்லையெனத் தெரிவித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ நேற்று தனது சட்டத்தரணியூடாக நீதிமன்றத்தில் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா விசேட நீதிமன்றத்துக்கு மேற்படி விடயம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு எவ்விதநியாயாதிக்கமும் இல்லையென்றும் குறிப்பிட்டார். நிதி மற்றும் பொருளாதார குற்றச்சாட்டு தொடர்பில் ஆராயும் முகமாகவே இந்நீதிமன்றம் நிறுவப்பட்டிருப்பதால் நூதனச்சாலை தொடர்பான விசாரணைகள் இந்நீதிமன்றத்தில் முனனெடுக்கப்பட முடியாதென்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்பா பீரிஸ் எதிர்வரும் வழக்கின்போது இதற்கான பதிலை தான் முன்வைப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

விசேட நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் அபயகோன்(தலைவர்), சம்பத் விஜேரட்ன மற்றும் சம்பா ஜனக்கி ராஜரட்ன ஆகியோர் தலைமையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மெதமுலன டி.ஏ. ராஜபக்ஷ நூதனசாலை மற்றும் ஞாபகார்த்த தூபியை நிர்மாணிப்பதற்கு காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திலிருந்து 33.9 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டிருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 01/23/2019 - 10:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை