அன்டி முர்ரே டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு

பிரித்தானியாவின் பிரபல டென்னிஸ் வீரரான அன்டி முர்ரே, ஏமாற்றத்துடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.

அவுஸ்ரேலியா பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில், 22ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ரோபர்டோ பாடிஸ்டா அகுட்டிடம், அன்டி முர்ரே தோல்வியை தழுவினார். இந்த தோல்வியுடன் டென்னிஸ் விளையாட்டுக்கு அன்டி முர்ரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதுவரை அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் என்ற சம்பியன் கிண்ணம், முர்ரேவுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. தற்போது அந்த கனியை உச்சிமுகராமலேயே ஒய்வு பெற்றுள்ளார்.

சமீபகாலமாக இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக 31 வயதான அன்டி முர்ரே அவதிப்பட்டு வந்தார்.

அதனால், தொடர்ந்தும் விளையாட முடியாதென உடல் ரீதியாக உணர்ந்ததால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவுஸ்ரேலியா பகிரங்க டென்னிஸ் தொடருடன் ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில், காயத்திலிருந்து மீண்டு களம்கண்ட அன்டி முர்ரே, 2ஆவது சுற்றில் தோல்விகண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். இந்த தோல்வி கடுமையாக பாதித்ததே அவரின் ஓய்வுக்கு காரணமாக அமைந்தது.

இதற்கடுத்து, அவர் தனது உடற்தகுதி காரணத்தை முன்னிறுத்தி ஓய்வெடுப்பதாக அறிவித்தார். இந்நிலையில் அன்டி முர்ரேவின் தீர்மானம் அவரது இரசிகர்களை கடுமையாக பாதித்துள்ளது.

முர்ரேவுக்கு தற்போது இரசிகர்கள், இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் என பலரும் சமூகவலைத்தளத்தின் ஊடாக வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பிக் ஃபோர் என்று சொல்லக்கூடிய கூட்டணியான ஃபெடரர், ஜோகோவிச், நடால் ஆகியோருடன் இணைந்து பேசப்பட்டவர் முர்ரே.

இதுவரை, 45 ஏடிபி பட்டங்கள் சம்பியன் பட்டங்களை வென்றுள்ள அன்டி முர்ரே, 2016ஆம் ஆண்டு உலகின் முதல் நிலை வீரராகவும் வலம் வந்துள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும், 3 கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளார். இதில் 2013ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் விம்பிள்டன் சம்பியன் பட்டங்களும், 2012ஆம் ஆண்டு அமெரிக்க டென்னிஸ் தொடரும் அடங்கும்.

கடந்த 77 வருடங்களில் விம்பிள்டன் பட்டத்தை வென்ற முதல் பிரித்தானிய வீரர் என்கிற பெருமையை அவர் அடைந்தார். இதுதவிர, ஐந்து அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலும், ஒரு பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரிலும் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

அத்தோடு, 2015ஆம் ஆண்டு டேவிஸ் கிண்ணம் வென்ற அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். மேலும் 2012ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் சம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 01/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை