தொலைதூர பனிக்கட்டி உலகத்தை வெற்றிகரமாக கடந்த நாசா விண்கலம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் பூமியுடன் தொடர்பு கொண்டு, ‘அல்டிமா துலே’ என்ற பனிக்கட்டி உலகத்தை வெற்றிகரமாக கடந்து சென்றதை உறுதி செய்துள்ளது.

பூமியில் இருந்து 6.5 பில்லியன் தொலைவில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருப்பதோடு, இதன்மூலம் சூரிய மண்டலத்தின் அதிக தொலைவில் இருக்கும் பொருள் ஒன்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது பதிவானது.

இந்த விண்பொருளை கடந்து செல்லும்போது நியூ ஹொரைசன்ஸ் கிகாபைட் அளவான புகைப்படங்கள் மற்றும் ஏனைய அவதானிப்புகளை செய்துள்ளது.

அவை அடுத்த மாதங்களில் பூமியை அடையவுள்ளன.

இந்த ஆய்வு இயந்திரத்தில் இருந்து அனுப்பப்பட்ட வானொலிச் செய்தியை ஸ்பெயினின் மெட்ரிட் நகரில் உள்ள நாசாவின் மிகப்பெரிய அலைக்கம்பி பெற்றுள்ளது.

அல்டிமா மற்றும் பூமிக்கு இடையில் விரிந்த விண்வெளித் தூரத்தை ஆறு மணி மற்றும் எட்டு நிமிடங்கள் கடந்தே அந்த செய்தி பூமியை அடைந்துள்ளது.

சமிக்ஞை கிடைத்ததும் அமெரிக்காவின் மெரிலாண்டில் உள்ள ஜொன் ஹோப்கின்ஸன் பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் காத்திருந்த விஞ்ஞானிகள் கைதட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். “விண்கலம் ஆரோக்கியத்துடன் உள்ளது” என்று இந்த திட்டத்தின் முகாமையாளர் அலிஸ் போமன் குறிப்பிட்டார்.

விண்கலத்தில் இருந்து கிடைத்த முதல் வானொலிச் செய்தி, அதன் நிலையை குறிப்பிடும் பொறியியல் தகவல்களை மாத்திரம் கொண்டதாக இருந்தது.

எனினும் அதில் நியூ ஹொரைசன்ஸின் கண்காணிப்பு கருவிகள் செயற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. எட்டு கிரகங்களுக்கும் அப்பால் சூரியனில் இருந்து 2 பில்லியன் கிலோமீற்றருக்கும் அதிக தொலைவில் வலம் வரும் உறைந்த பொருட்கள் கொண்ட கூபர் பட்டையிலேயே அல்டிமா உள்ளது. இது 2015 ஆம் ஆண்டு நியூ ஹொரைசன்ஸ் அடைந்த நெப்டியுன் குறுங்கோளை விடவும் 1.5 பில்லியன் கிலோமீற்றர் தொலைவில் உள்ளது.

எனினும் இந்த கூப்பர் பட்டையில் அல்டிமா போன்று பல்லாயிரக்கணக்கான பொருட்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இவைகள் மூலம் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரான சூரிய மண்டலத்தின் தோற்றம் பற்றிய தடயங்களை பெற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

எனினும் தற்போது பெறப்பட்டிருக்கும் அல்டிமா தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் விண்கலத்தில் இருந்து பூமிக்கு வந்து சேர 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை எடுத்துக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி முழுமையான புகைப்படம் ஒன்று வரும் பெப்ரவரிக்கு முன் பூமிக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2006 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் புளுட்டோ மற்றும் கூப்பர் பட்டை தொடர்பான கேள்விகளுக்கு விடைகாணும் நோக்கத்தை கொண்டிருந்தது.

Thu, 01/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை