படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு நஷ்டஈடு

படைப்புழுவினால் பாதிப்புற்ற விவசாய நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளதாக விவசாய மற்றும் கிராமியப் பொருளாதார அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்தார்

படைப்புழுவை கட்டுப்படுத்த நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களின் தாக்கம் தொடர்பில் ஆராயவிருப்பதாகத் தெரிவித்த அமைச்சர், இந்த இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதால் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்தும் இரசாயனப் பொருட்கள் பயன்படுத்திய பின்னர் அறுவடை செய்யப்படும் உணவுப் பொருட்களினால் மக்களுக்கு ஏதும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றதா என்பது பற்றியும் ஆராயப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். அநுராதபுரம் கமநல சேவை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்த அவர்:

சில பிரதேசங்களில் படைப்புழுவை கட்டுப்படுத்தும் இரசாயனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் பயன்பாட்டினால் சுகாதார தாக்கங்கள் ஏற்படலாம். பொருத்தமில்லா இரசாயன பொருட்களைப் பயன்படுத்தாமல் உள்நாட்டு மூலிகைகளைப் பயன்படுத்தி படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் முறையொன்றைக் கண்டு பிடிக்க வேண்டும். சில நாடுகளில் புழுக்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் உள்நாட்டு முறைகளை இங்கும் செயற்படுத்த முடியும். விசேட செயலணி உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், விவசாய ஆய்வு அதிகாரிகள், விவசாய ஆய்வாளர்கள், போன்றோர் படைப்புழுவைக் கட்டுப்படுத்து வதற்காக, அவை பரவியுள்ள பகுதிகளுக்குச் சென்றுள்ளனர்.

அமெரிக்கா, ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இந்த வகையான புழுக்கள் பரவியுள்ள போதும் அங்கு இவ்வாறு இரசாயன பொருட்கள் பயன்படுத்தப் படவில்லை. விவசாயிகள் இதனைத் தடுக்க முறையொன்றைப் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். (பா)

 

Tue, 01/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை