பெடரல் முறையை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்!

'எமது உறவு பொதுஜன பெரமுனவுடன் ஆகும்' என்கிறார் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா

கேள்வி: -அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு ராஜபக்ஷக்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், அது கட்சியின் உள்ளக குழப்ப நிலை வரை வளர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றதே...

பதில்: -ஒருவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டால், மற்றைய தரப்பினர் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் செயற்பாட்டின் காரணத்தினால் இன்னமும் அவ்வாறான பரிந்துரை தொடர்பில் பதில் கூறுவதற்கு என்னால் முடியாதுள்ளது. கட்சியினுள் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன என்ற விடயம் எனக்குத் தெரியாது. எனினும் எவரேனும் ஒருவரின் பெயர் முன்மொழியப்படுமாயின் அதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

கேள்வி: -ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தான் தயார் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோத்தாபய ராஜபக்ஷ கூறியுள்ளதை சில ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. அதேபோன்று அவர் தாமரை மொட்டு அங்கத்துவத்தைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றதே...

பதில்: -கோத்தாபய ராஜபக்ஷ தாமரை மொட்டு கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றிருக்கலாம். அவரிடத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஏதேனும் நிலைப்பாடும் இருக்கலாம். என்றாலும் இறுதித் தீர்மானங்கள் எதுவும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என்றே நான் கூறுகின்றேன்.

கேள்வி: -அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கட்சியிலிருந்து அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. அவ்வாறு நடந்தால் உங்களது வெற்றி அந்தளவு இலகுவானதல்லதானே?

பதில்: -அடுத்த தேர்தலில் பல்வேறு விடயங்கள் அடிப்படையாகக் கொள்ளப்படும் என்றே நான் நினைக்கின்றேன். எனவே இந்நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கக் கூடிய ஒருவரைப் பற்றியே அனைவரும் பேசுகின்றார்கள். அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு பெரும்பான்மையான செல்வாக்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்நாட்டில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கக் கூடிய ஒருவரைப் பற்றியே இப்போது பேசப்படுகின்றது.

கேள்வி: -நீங்கள் அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடப் போவது ஸ்ரீ.ல.சு.கட்சியாகவா அல்லது பொதுஜன பெரமுன கட்சியாகவா?

பதில்: -தற்போது இடம்பெற்று வரும் பிரதான பேச்சுக்கள் பொதுஜன பெரமுன, ஸ்ரீ.ல.சு.கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் இணைந்து செயற்படுவதைப் பற்றியே அமைந்துள்ளன. தேர்தல் அறிவிக்கப்படும் போது அந்த கூட்டணி செயற்பாட்டை ஆரம்பிக்கும்.

கேள்வி: -தற்போது ஸ்ரீ.ல.சு.கட்சியின் மாற்றுக் குழு ஒன்று தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பேச்சுக்களை நடத்துகின்றதுதானே?

பதில்: -ஸ்ரீ.ல.சு.கட்சியின் சொந்தக்காரர்கள் என்போர் அந்தக் கட்சியைச் சுற்றியிருப்போரேயாவர். அந்த உறவை முறித்துக் கொண்டு உறவினர்களல்லாத கூட்டத்தாரோடு செல்வதால் ஸ்ரீ.ல.சு.கட்சியின் வாக்குகள் அவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லையே! எனவே ஸ்ரீ.ல.சு.கட்சி பொதுஜன பெரமுனவுடனேயே உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனைய மாற்றுக் குழுக்களைப் பற்றிப் பேசுவதில் பயனில்லை.

கேள்வி: புதிய அரசியலமைப்பு நாட்டைப் பிரிக்கும் 'பெடரல்' அரசியலமைப்பு எனக் கூறி எதிர்க்கட்சி பொய்யான மாயையை உருவாக்குவதாக உங்கள் தரப்பு மீது குற்றச்சாட்டு உள்ளதுதானே?

பதில்: -அரசியலமைப்பு ஒன்று கொண்டு வர வேண்டுமாயின் அந்த அரசியலமைப்பு அனைத்து தரப்பினரினதும் கலந்துரையாடலுக்கு உள்ளாக வேண்டும். அவ்வாறில்லாமல் எவரேனும் இருவர் அவர்களது தேவைக்கு ஏற்ப தயாரித்த ஆவணத்தை அரசியலமைப்பாக ஏற்றுக் கொள்ள நாம் தயாரில்லை. அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொண்டு நாட்டை எப்படி கொண்டு செல்வது? இதனால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. முஸ்லிம் மக்களின் பிரச்சினை தீரப் போவதுமில்லை. முதலில் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பு என்பது ஒரு சட்ட ஆவணம். இது எமக்கு ஒரு கதையைப் போன்றே தெரிகின்றது. அவ்வாறு அரசியலமைப்பை உருவாக்க எம்மால் முடியாது. இந்த அரசியலமைப்பை யாரும் விரும்புவார்கள் என நாம் நினைக்கவில்லை.

கேள்வி: -தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளி என பிரேரணை ஒன்றைச் செய்ய ஆயத்தங்கள் உள்ளதுதானே? இதன் ஊடாக அரசாங்கத்தை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கத்தானே உங்கள் தரப்பு முயற்சிக்கின்றது?

பதில்: -இவர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தாலும் அரசாங்கத் தரப்புடன் இணைந்திருப்பதைப் போலத்தானே தெரிகின்றது. எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தாலும் அவர்கள் அரசாங்கத்திற்குத் தேவையான விடயங்களில் ஒத்துழைப்பை வழங்குகின்றனர். இது தொடர்பான சந்தேகத்தைத் தீர்க்க வேண்டியது அரசாங்கத்தின் பணியாகும். தாம் கூறுவதற்கு ஏற்பவே அரசாங்கம் வடக்கில் செயற்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருக்கின்றார்.

இது தொடர்பில் அரசாங்கம் எந்த அறிக்கையையும் விடவில்லை. அரசாங்கம் அவர்களது தேவைக்காகவா அல்லது நாட்டின் தேவைக்காகவா செயற்படுகின்றது என்பது தொடர்பில் எமக்குத் தெளிவில்லை. அரசாங்கம் இவ்வாறான கூற்றுகளுக்குப் பதிலளிக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் அனைத்திலும் இருப்பது தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகளாவர். இவர்களுள் அனேகமானோர் பிரிவினைக்கு சார்பானவர்கள். சிலர் பிரவினையினை எதிர்க்கின்றார்கள். நாட்டைப் பிரிக்கும் 'பெடரல்' முறையினை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அவ்வாறில்லாமல் தமிழ் இனத்திற்கோ அல்லது கட்சிகளுக்கோ எதிராகச் செயற்படுவதற்கு நாம் தயாரில்லை. இவர்கள் இலங்கையின் பிரதான கட்சிகளோடு இணைவார்களாயின் அதுவே நல்லது. அப்போது பல வருடங்களாக இருந்த இந்தப் பிரச்சினை முடிந்து விடும்.

கேள்வி: -ஊடகங்கள் இதனை விடவும் தர்மங்களைப் பேணவேண்டும் என்ற அடிப்படையில் ஊடக நிறுவனங்கள் முன்னால் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இது அரசாங்கத்தினால் செய்யப்பட்ட ஒன்று என உங்களது தரப்பு கூறுகின்றது. முன்னாள் ஊடகத் துறை அமைச்சர் என்ற வகையில் இன்று ஊடகங்களின் செயற்பாட்டை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: -உண்மையில் இந்த ஊடக தர்மங்கள் தொடர்பில் எமது காலத்திலும் பல விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டது. ஊடகங்களை ஒழுங்கு விதிகளால் கட்டுப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது. அவ்வாறில்லாமல் சுயநெறிமுறைகளால் கட்டுப்பட வேண்டும் என மேற்கொண்ட முடிவுகளே இறுதியில் ஒரு விடயமாக இருந்தது. எந்த ஒரு அரசாங்கமும் ஆட்சிக்கு வந்ததும் அந்த அரசுக்கு எதிராக விமர்சனங்களைச் செய்து ஊடகங்கள் செயற்படுகின்றன. தனியார் ஊடகங்கள் அனேகமாக அரசாங்கத்திற்கு எதிராகவே தமது கருத்துக்களை வெளியிடும்.

இது நேற்று இன்றுள்ள பிரச்சினையல்ல. அன்றிலிருந்தே இருக்கும் பிரச்சினை. அமெரிக்காவில், இலங்கையில் எங்கும் ஊடகங்கள் செயற்படுவது அவ்வாறுதான். ஊடகங்கள் கறுப்பா, வெள்ளையா என்று ஒன்று இல்லை. அரசாங்கமும் அதனை விடவும் நடைமுறைமிக்கதாக இருக்க வேண்டும். இது உலகம் முழுவதிலும் இருக்கின்றது. சில நாடுகளில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று ஊடகங்கள் பிரிந்திருக்கின்றன. அதனை நிறுத்த முடியாது. இலங்கையில் சுயாதீன ஊடக கலை நீண்ட காலமாக இருந்தது. ஊடக கலையை மிகவும் முதிர்ச்சிமிக்கதாக ஆக்குவது ஊடகவியலாளர்களேயாவர். தமக்கு எதிராக எழுதுகிறார்கள் என்பதற்காக கறுப்பு, வெள்ளை என்று லேபல் ஒட்டப் போனால் அந்தப் பிரச்சினை முடிவடையக் கூடிய ஒன்றல்ல.

சுபத்ரா தேசப்பிரிய
தமிழில்: எம்.எஸ்.முஸப்பிர்
(புத்தளம் விஷேட நிருபர்)

Sat, 01/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை