பல கட்சிகளுடன் இணைந்து பெரும்முன்னணியாக களமிறங்க உள்ளோம்

சிறிலங்கா பொதுஜன பெரமுன, சுதந்திரக் கட்சி உள்ளிட்ட மேலும் பல கட்சிகளுடன் இணைந்து பெரும் முன்னணியாகத் தேர்தலில் களமிறங்க தயாராகி வருவதனைக் கண்டு அஞ்சியே அதனை குளறுபடி செய்வதற்கு சிலர் திட்டமிட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணாயக்கார நேற்று தெரிவித்தார்.  

பொரளையில் அமைந்துள்ள என்.எம். பெரேரா நிலையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வாசுதேவ எம்.பி இவ்வாறு கூறினார்.  

"அமெரிக்க கடற்படையினர் திருகோணமலையில் பயிற்சிகளில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. இங்கும் அது பற்றி கூறப்பட்டுள்ளது. ஆனால், இது பற்றி பொறுப்புவாய்ந்த எவரும் எவ்வித அறிக்கைகயையும் இதுவரை வெளியிடவில்லை. இந்த நாட்டிலிருந்த பிரித்தானிய இராணுவ முகாம்கள் அனைத்தையும் நாம் 1956ஆம் ஆண்டு வெளியேற்றி விட்டோம். அதன் பின்னர் இங்கு எந்தவொரு நாட்டுக்கும் இராணுவ முகாம்களை அமைக்க நாம் இடமளிக்கவில்லை. ஆனால், இன்று நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தல் இடம்பெற்றுள்ளது. இதுபற்றிய விவரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும். இது மறைத்து செய்யக்கூடிய விடயமல்ல" என்றும் வாசுதேவ எம்.பி தெரிவித்தார்.  

அனைத்து ஊடகங்களையும் மறுசீரமைக்க வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருக்கும் கருத்தை நாம் முற்றாக கண்டிக்கின்றோம். ஊடகங்கள் அவதூறான செய்திகளை பிரசுரிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அது ஊடகங்களின் தனிப்பட்ட விடயம். எந்தவொரு ஊடகத்துக்கும் சுயாதீனமாக தீர்மானம் எடுக்கும் உரிமையுண்டு. அவர்கள் தமக்குரிய சட்ட விதிகளை மீறினால் அது தொடர்பில் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும். அதனைத்தவிர அரசாங்கத்தால் ஊடகங்களில் செல்வாக்குச் செலுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.  

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபஷ ஆகியோரை கொலை செய்வது பற்றிய திட்டத்தை வெளிக்கொணர்ந்த நாமல் குமாரவுக்கு எதிராக தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணை அவர் முன்வைத்த குற்றச்சாட்டு மற்றும் வழங்கிய தகவல்கள் தொடர்பாக சந்தேகம் எழுப்புவது போன்றதாகும். அதனால் நாமல் குமார வெளியிட்ட தகவல்களின் மதிப்பை குறைப்பதற்கு எடுக்கும் சூழ்ச்சியாகவே இது தெரிகிறதென்றும் வாசுதேவ எம்.பி குற்றம் சுமத்தினார்.    

Tue, 01/08/2019 - 08:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை