சிவில் நடவடிக்கையாகவே கல்வி இருப்பது அவசியம்

இராணுவ அதிகாரத்தின் கீழிருப்பதை அனுமதிக்க முடியாது

கல்வி நடவடிக்கை என்பது அரசாங்கத்தின் சிவில் நடவடிக்கையாக இருக்கவேண்டுயன்றி அது ஒரு இராணுவ நடவடிக்கையாகவோ அல்லது துணைப்படை பயிற்சி பெற்ற ஒருவரின் அதிகாரத்தின் கீழ் இருக்கவோ கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.  

முல்லைத்தீவு மாவட்டத்தில் 90 முன்பள்ளிகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 248 முன்பள்ளிகளும் இராணுவக்கட்டமைப்பின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்த முன்பள்ளிகளில் பணியாற்றுகின்ற 550 வரையான ஆசிரியர்களுக்கு சிவில் பாதுகாப்பு படையினர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த முன்பள்ளிகள் தொடர்ந்து இராணுவ கட்டமைப்பின் கீழ் உள்ள சிவில்பாதுகாப்புத் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.  இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கருத்துத் தெரிவிக்கும் போது, இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி செயலணிக்கூட்டத்தில் வடக்கு, கிழக்கிலே உள்ள முன்பள்ளிகளை இராணுவ சிவில் திணைக்களத்தின் கீழ் வைத்திருக்க முடியாது என்ற கோரிக்கையை நான் முன்வைத்திருந்தேன். முன்பள்ளி ஆசிரியர்களை அத்திணைக்களத்திலிருந்து விடுவித்து கல்வித்திணைக்களத்தின் கீழ் மாற்றி அவர்களுக்கான சம்பளங்கள் அரச ஊழியர் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைத்திருந்தேன்.  

இராணுவப் புலனாய்வாளர்கள், சிவில் திணைக்கள அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு தவறான கருத்துக்களை விதைத்து அவர்களை வேறு திசைக்குகொண்டு செல்வதை எங்களால் அவதானிக்க முடிகின்றது.  

குறிப்பாக, இராணுவச் செயற்பாடுகள் இராணுவப்பிரசன்னங்கள் இராணுவ விஸ்தீரணங்கள் இந்த மண்ணிலே விதைக்கப்பட்டுள்ளன.  இந்த சூழலில் சர்வதேச அழுத்தம் இலங்கைக்கு அதிகரித்துள்ளது.   இதனை மறைப்பதற்காக இராணுவ சிவில் திணைக்களங்களின் மூலம் எமது மக்களை இழுத்து அரசாங்கம் மறைமுறைமாக தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இருந்தாலும் நாங்கள் இந்த விடயத்தில் உறுதியாக இருக்கின்றோம்.கல்வி நடவடிக்கை என்பது ஒரு அரசிற்கு கீழ் சிவில் நடவடிக்கையாக இருக்கவேண்டும். மாறாக அது ஒரு இராணுவ நடவடிக்கையாகவோ அல்லது இராணுவத் துணைப்படைப் பயிற்சியைப் பெற்ற ஒருவருக்குக் கீழ் இருக்கக்கூடாது என்பதில் மிகத்தெளிவாக நாங்கள் இருக்கின்றோம் என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

(பரந்தன் குறூப் நிருபர்)  

Tue, 01/08/2019 - 09:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை