உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் என் துப்பாக்கியை பயன்படுத்துவேன்

தனக்கோ தனது குடும்பத்துக்கோ குண்டர்களால் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டால் தனது துப்பாக்கியை பயன்படுத்த தயங்கப் போவதில்லை என ஐ. ம. சு. மு பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன் வைத்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நான் திருகோணமலை மாவட்டத்தில் சேவையாற்றி வருகிறேன். அங்கு தமிழ்,முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் எனக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. ஆனால் சிங்களவர் வாழும் இடத்திலேயே அண்மையில் எனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டது. நான் அங்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் பல இடங்களில் மக்களுக்கு உதவி வழங்கிக் கொண்டிருந்தேன். அங்கு வந்த ஒருவர் என்னை அரிவாளால் வெட்ட முயன்றார்.

இவரை எனது பாதுகாப்பு அதிகாரி தடுத்தார். அவர் ஒரு கஞ்சா வியாபாரி. அவருக்கு எதிராக யாரும் செயற்படுவதில்லை. அவரின் பின்னால் ஐக்கிய தேசியக் கட்சியோ, சுதந்திரக்கட்சியோ, தமிழ் கூட்டமைப்போ, முஸ்லிம் காங்கிரஸோ இல்லை. நான் 119 ற்கு அறிவித்தும் யாரும் வரவில்லை. பொலிஸில் சென்று முறையிட்டேன். என்னை அரிவாளால் வெட்ட முயன்றவரை பொலிஸாரால் கூட கைது செய்ய முடியவில்லை. பின்னர் அவர் கைது செய்யப்பட்டாலும் விடுவிக்கப்பட்டுவிட்டார். எனது பாதுகாப்புக்காக அனுமதி பெற்ற கைத்துப்பாக்கி வழங்கப்பட்டிருக்கிறது.

எனக்கோ எனது மனைவிக்கோ, குடும்பத்தினருக்கோ உயிர் அச்சுறுத்தல் ஏற்படுமானால் குறைந்தளவு அதிகாரத்தை பயன்படுத்தி எனது துப்பாக்கியை பயன்படுத்துவேன் .எனக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்.மகேஸ்வரன் பிரசாத் 

 

Wed, 01/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை