சிட்னி அரங்கை அதிரவைத்த புஜாரா-ரிஷப் பந்த்: இந்தியா 622 ஓட்டங்கள்

சிட்னியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் புஜாரா, ரிஷப் பந்த், ஜடேஜா ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 622 ஓட்டங்கள் பெற்று ஆட்டத்தை இடை நிறுத்தியது.

அவுஸ்திரேலியா -- இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்ட் மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. பெர்த் டெஸ்டில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது.

புஜாரா, மயாங்க் அகர்வால் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 303 ஓட்டங்கள் சேர்த்திருந்தது. மயாங்க் அகர்வால் 77 ஓட்டங்கள் சேர்த்தார். புஜாரா 130 ஓட்டங்களுடனும், விகாரி 39 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய புஜாரா சிறிது நேரத்தில் 150 ஓட்டங்களைக் கடந்தார். உணவு இடைவேளையின்போது இந்திய அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்பிற்கு 389 ஓட்டங்கள் எடுத்திருந்தது. சிட்னி அரங்கை அதிரவைத்த புஜாரா 181 ஓட்டங்களுடன் இரட்டை சதத்தை நோக்கி பயணித்தார்.

உற்சாகத்துடன் பந்துகளை பறக்க விட்ட புஜாரா, நேற்று தனது நான்காவது இரட்டை சதத்தை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமான அவர் 193 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து ரிஷப் பந்த், ஜடேஜா இருவரும் அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர். அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை மிரட்டிய ரிஷப் பந்த் சதம் அடித்தார். மறுமுனையில் ஜடேஜா அரை சதம் கடந்தார். இதன் மூலம் அணியின் ஸ்கோர் 500 ஓட்டங்களைத் தாண்டியது. 7வது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் 200க்கும் அதிகமான ஓட்டங்கள் சேர்த்தனர்.

இந்நிலையில் ஜடேஜா 81 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து முதல் இன்னிங்சை இடைநிறுத்துவதாக இந்திய அணியின் தலைவர் கோலி அறிவித்தார். அப்போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 622 ஓட்டங்கள் குவித்திருந்தது.

ரிஷப் பந்த் 159 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். அவுஸ்திரேலியா தரப்பில் லயன் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. தொடக்க வீரர்களாக ஹாரிஸ், கவாஜா களமிறங்கினர்.அவ்வணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ஓட்டங்களை பெற்றுள்ளது.இன்று போட்டியின் மூன்றாவது நாளாகும்.

Sat, 01/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை