வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (5) இலங்கை நேரப்படி காலை 6.30 மணிக்கு முதலாவது போட்டி நடைபெற்ற பே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நேற்றுமுன்தினம் (4) நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 371 எனும் இமாலய இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 45 எனும் குறுகிய ஓட்டங்களால் தோல்வியைத்தழுவியிருந்தமை ரசிகர்களுக்கு ஒருபுறம் ஏமாற்றத்தை அளித்திருந்தாலும் மறுபுறம் துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் எழுச்சி புதுவருடத்தில் இலங்கை அணி மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச்செய்துள்ளது எனலாம். குறிப்பாக நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக இடையேயான சதம் மற்றும் குசல் பெரேராவின் சதம் ஆகியன இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் குறிப்பிடத்தக்களவு எழுச்சியை காண்பிப்பதாகவே அமைந்தது.

எனினும் கடந்த வருடம் போலவே இலங்கை அணியின் பலவீனமான மத்திய வரிசை துடுப்பாட்டமும் பந்து வீச்சாளர்களின் நேர்த்தியற்ற பந்து வீச்சுமே நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியின் முக்கிய காரணமாக இருந்தன.

எனவே இவ்விரண்டு பிரிவுகளிலும் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்த்த நிலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியின் முடிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை அணித்தலைவர் மத்திய வரிசை துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு துறையில் மாற்றங்களுடனேயே இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளதாக தெரிவித்தார்.

எனவே இன்றைய போட்டியில் அசேல குணரத்ன அல்லது சீக்குகே பிரசன்னவுக்கு பதிலாக தசுன் சானக உள்வாங்கப்பட வாய்ப்புள்ளதுடன் நுவன் பிரதீப்பிற்கு பதிலாக கசுன் ராஜித அல்லது துஷ்மந்த சமீர உள்வாங்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முதல் போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக பந்து வீசத்தவறிய இலங்கை அணிக்கு ஐசிசியினால் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இன்றைய போட்டியில் நேர முகாமைத்துவமும் தொடர்பாகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி

நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், அசேல குணரத்ன, திசர பெரேரா, தசுன் சானக, குசல் பெரேரா, லக்ஷான் சந்தகன், லசித் மாலிங்க (தலைவர்), துஷ்மந்த சமீர மறுபுறம் சகல துறையிலும் பிரகாசித்த நியூசிலாந்து அணியில் மாற்றங்கள் ஏதும் இடம்பெற வாய்ப்பில்லாத போதிலும் இன்றைய போட்டி தொடரைத் தீர்மானிக்கும் முக்கியமான போட்டி என்பதால் முதல் போட்டியில் பந்து வீச்சில் பெரிதாக சோபிக்காத மெட் ஹென்றிக்கு பதிலாக டிம் சவ்தி மீண்டும் அணியில் இடம்பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்கப்படும் நியூசிலாந்து அணி

மார்ட்டின் கப்டில், கொலின் மொன்றோ, கேன் வில்லியம்சன் (தலைவர்) , ஜேம்ஸ் நீசாம், டிம் செய்பர்ட், ஹென்றி நிக்கோல்ஸ், ட்ரென்ட் போல்ட், லோகி பேர்குசன், டக் ப்ரஸ்வெல், டிம் சவ்தி, இஷ் ஷோதி

இன்று போட்டி இடம்பெறவுள்ள ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகமான ஆடுகளம் என்பதனால் பந்து வீச்சாளர்களுக்கு இன்றைய தினமும் பந்து வீச்சாளர்களை பரிசோதிக்கும் களமாகவே அமையவுள்ளதுடன் இன்றைய போட்டியும் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான போட்டியாக அமையும் என்பதனையும் எதிர்பார்க்கலாம்.

(அஸாப் மொஹமட்)

 

Sat, 01/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை