இனவெறி கருத்து வெளியிட்டதால் சப்ராஸுக்கு 4 போட்டிகளில் தடை

இனவெறி கருத்து வெளியிட்டதற்காக பாகிஸ்தான் அணித்தலைவர் சப்ராஸ் அஹமட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் நான்கு போட்டிகளில் விளையாடத் தடை விதித்துள்ளது.   கடந்த வாரம் நடந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சப்ராஸ் கூறிய கருத்து விக்கெட்டில் இருக்கும் ஒலிவாங்கி மூலம் அம்பலமானது.   டர்பனில் நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க சகலதுறை வீரர் அன்டிலே பெஹ்லுக்வாயோ போட்டியின் வெற்றிக்கு உதவிய ரசி வான் டெர் டுசன் உடன் இணைப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோதே அன்டிலே குறித்து சப்ராஸ் உருது மொழியில் கருத்துக் கூறினார்.  

இதில் அவர், “கறுப்பின மகனே, உனது தாய் இன்று எங்கே அமர்ந்திருப்பாள்? இன்று உனக்காக என்ன (பிரார்தனை) செய்தாள்?” என்று குறிப்பிட்டுள்ளார்.  

இந்நிலையில் ஐ.சி.சி. தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சட்சன் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் “இவ்வாறான நடத்தை குறித்து ஐ.சி.சி. சகிப்புத்தன்மை காட்டாத கொள்கையை கொண்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.  

தனது கருத்துக்காக சப்ராஸ் சமூகதளத்தின் ஊடே பின்னர் மன்னிப்புக் கோட்டுக் கொண்டார்.  

“எனது கோபத்தின் வெளிப்பாடு யாரையாவது புன்படுத்தி இருந்தால் நான் மனப்பூர்வமாக மன்னிப்புக் கோட்டுக்கொள்கிறேன்.

எனது வார்த்தைகள் நேரடியாக யாரையும் குறிப்பிடுவதாகவோ, காரையும் புன்படுத்தும் நோக்கத்திலோ வெளிப்படுத்தப்படவில்லை” என்று சப்ராஸ் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.  

“எனது கருத்து எதிரணியினரால் அல்லது கிரிக்கெட் ரசிகர்களால் கேட்டுருக்க, புரிந்துகொள்ள அல்லது தொடர்பாடுவதற்கு முடியும் என்று கூட நான் நினைத்திருக்கவில்லை” என்று சப்ராஸ் குறிப்பிட்டிருந்தார்.  

அவரது மன்னிப்பு ஏற்கப்பட்ட நிலையிலேயே சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் அவர் மீதான போட்டித் தடையை நிர்ணயித்துள்ளது.  

“சப்ராஸ் உடனடியாக குற்றத்தை ஒப்புக்கொண்டு, தனது செயலுக்காக வருந்தி பொது மன்னிப்பு ஒன்றை கோரினார். எனவே அவர் மீதான பொருத்தமான நடவடிக்கையின்போது இது கருத்தில் கொள்ளப்பட்டது” என்று ரிச்சட்சன் குறிப்பிட்டார்.  

எனினும் இந்த சம்பவம் குறித்து ஒரு எளிதான கருத்தை கொண்டிருக்கும் பெஹ்லுக்வாயோ, போட்டிக்கு பின்னர், “அது நல்ல சம்பாசனையாக இருந்தது” என்றார்.  

எனினும் சப்ராஸின் கருத்து, “தேசியம், பூர்வீகம், நிறம், கலாசாரம், சமயம் அல்லது அவர்ளின் இன அடிப்படையில் வீரர்கள், வீரர்களின் உதவியாளர், நடுவர், போட்டி மத்தியஸ்தர், நடுவர் உதவியாளர், அல்லது (ரசிகர்கள் உட்பட) எந்த ஒருவர் மீதும் அவமானப்படுத்தல், கேலி செய்தல், புண்படுத்தல், அச்சுறுத்தல், இழிவுபடுத்தல் அல்லது அவதூறு கூறுவது என (மொழி, செய்கை அல்லது வேறுவிதமாக) எந்த ஒரு நடத்தையிலும்் ஈடுபடுவது” என்ற ஐ.சி.சி ஒழுங்கு விதியை மீறுவதாக உள்ளது.  

இதன்படி சப்ராஸ் தென்னாபிரிக்காவுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் எஞ்சிய இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் டி-20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  

தவிர, ஐ.சி.சி. இனவெறி எதிர்ப்பு ஒழுங்கு விதியின் உறுப்புரை 7.3இன் கீழ் இது தொடர்பிலான விழிப்புணர்வு மற்றும் புரிதலை பெறுவது குறித்த கல்வி நிகழ்ச்சியிலும் சப்ராஸ் பங்கேற்க வேண்டி உள்ளது. 

சப்ராஸ் அஹமட் இல்லாத நிலையில் பாகிஸ்தான் அணிக்கு சொஹைப் மலிக் அணித்தலைவராக செயல்படுகிறார்.      

Mon, 01/28/2019 - 14:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை