23 ஆண்டு சாதனையை முறியடித்த திசர பெரேரா

நியூசிலாந்துடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அதிரடி சதம் பெற்ற திசர பெரேரா ஒருநாள் இன்னிங்ஸ் ஒன்றில் இலங்கை துடுப்பாட்ட வீரர் ஒருவர் விளாசிய அதிக சிக்ஸர் சாதனையை முறியடித்தார்.  

பே ஓவலில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 21 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்ததை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து 2–0 என கைப்பற்றியது. இந்தப் போட்டியில் அதிரடியாக ஆடிய திசர பெரேரா 13 சிக்ஸர்களை விளாசி புதிய சாதனை படைத்தார்.  

1996 ஆம் ஆண்டு சனத் ஜனசூரிய பாகிஸ்தானுக்கு எதிராக 11 சிக்ஸர்களை பெற்று இலங்கை வீரர் ஒருவர் ஒருநாள் இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற அதிகூடிய சிக்ஸர்கள் என்ற சாதனையையே திசர பெரேரா முறியடித்தார். எனினும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களாக தலா 16 சிக்ஸர்கள் பெற்ற ரொஹித் ஷர்மா, ஏ பி டிவிலியர்ஸ் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோர் முதலிடத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.  

எனினும் நியூசிலாந்துடனான போட்டியில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய திசர பெரேரா 7ஆவது வரிசையில் களமிறங்கி 74 பந்துகளில் 8 பெளண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்களுடன் 140 ஓட்டங்களை பெற்றார். இது அவரது கன்னி ஒருநாள் சதம் என்பதோடு அந்த சதத்தை அவர் 50 பந்துகளில் எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

சனத் ஜயசூரியவுக்கு பின்னர் குறைந்த பந்துகளில் சதம் பெற்ற இலங்கை வீரராகவும் திசர பெரேரா பதிவானார்.  

Mon, 01/07/2019 - 11:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை