பிரிஸ்பேன் பகல் இரவு டெஸ்ட்: 144 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை

பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான பகல்-  இரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 144 ஓட்டங்களுக்கு சுருண்டது

இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அவுஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பிரிஸ்பேனில் தொடங்கியது. பகல் - இரவு ஆட்டமாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் துடுப்பாட்டதை தேர்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் திரிமான்ன 12 ஓட்டங்களில் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்ட மிழந்தார். அடுத்து வந்த அணியின் தலைவர் சந்திமால் 5 ஓட்டங்களுக்கும், கருணரத்ன 24 ஓட்டங்களிலும், குசால் மெண்டிஸ் 14 ஓட்டங்களிலும், தனஞ்ஜய டி சில்வா 5 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

அதன்பின்னர் ரோசேன் சில்வாவுடன் விக்கெட் காப்பாளர் திக்வெல்ல ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். நீண்ட நேரம் களத்தில் தாக்குப்பிடித்த ரோசேன் சில்வா 56 பந்துகளில் 9 ஓட்டங்கள் எடுத்து ஆட்மிழந்தார். ஒருபுறம் திக்வெல்ல நிலைத்து நிற்க மறுபக்கம் பெரேரா 1 ஒட்டத்துடனும், லக்மல் 7 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை 106 ஓட்டங்களுக்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது.

இதற்குமேல் நின்று ஆடினால் பலனில்லை என்பதை புரிந்து கொண்ட திக்வெல்ல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைச்சதம் அடித்த திக்வெல்ல 64 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது இலங்கை அணி 144 ஓட்டங்கள் எடுத்திருந்தது. சமீர ஓட்டம் ஏதும் எடுக்காமல் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க இலங்கை முதல் இன்னிங்சில் 144 ஓட்டங்களில் சுருண்டது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.இதேவேளை தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 72 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அவ்வணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக ஹரீஸ் மற்றும் பேரன்ஸ் ஆகியோர் களமிறங்கி நிதானமாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த நிலையில் பேர்ன்ஸ் 15 ஓட்டங்களுக்கு ஆட்டமழிழந்து சென்றார்.பின்னர் ஹரீஸுடன் இணைந்தார் உஸ்மான் கவாஜா அவரும் நிதானமாக ஆடுவார் என்ற நிலையில் 11 ஓட்டங்கள் பெற்ற போது ஆட்டமிழந்து வெளியேறினார்.அவ்வணியின் லயன் மற்றும் ஹரீஸ் முறையே 0,40 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் லக்மால் மற்றும் பெரேரா ஒரு வீக்கெட் வீதம் வீழ்த்தினர். இலங்கை அணியை விட 72 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 8 விக்கெட்டுகள் ஆஸி அணி வசம் உள்ளது. இன்று போட்டியின் இரண்டாம் நாளாகும்.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இது முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 4 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலிய அணியும், 2 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணியும் இதுவரை தோல்விகளை சந்திக்கவில்லை.

Fri, 01/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை