ஆப்கான் இராணுவ முகாம் மீது தலிபான் தாக்குதல்: 100 பேர் பலி

ஆப்கான் தலைநகர் காபுலுக்கு வெளியில் உள்ள இராணுவ முகாம் மற்றும் பொலிஸ் பயிற்சி மையம் ஒன்றின் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் ஆப்கான் பாதுகாப்பு படையின் 100க்கும் அதிகமான உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வர்தாக் மாகாணத்தின் தலைநகர் மெய்தான் ஷஹ்ரில் கடந்த திங்கட்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. “இராணுவ பயிற்சி மையத்திற்குள் இடம்பெற்ற வெடிப்பில் 126 பேர் கொல்லப்பட்டிருப்பதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது” என்று ஆப்கான் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

காஸ்னி மற்றும் காபுல் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் மெய்தான் ஷஹ்ர் நகர் தலைநகர் காபுலில் இருந்து தென்மேற்கில் சுமார் 44 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது.

இந்த தாக்குதலில் 100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதை மாகாண அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு உறுதி செய்துள்ளார். இது பற்றி கருத்து வெளியிட அரச பேச்சாளர் ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 12 பேர் மாத்திரமே கொல்லப்பட்டதாக அரசு முன்னதாக குறிப்பிட்டிருந்தது.

காயப்பட்ட சிலர் மாகாண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதோடு, ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் காபுலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மெய்தான் ஷஹ்ர் முகாமின் வாயில் கதவுக்கு கார் குண்டு தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியதை தலிபான்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தலிபான்கள் அந்த முகாமுக்குள் ஊடுருவி தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இவ்வாறான பாணியில் தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தலிபான்் அமைப்பு நாட்டில் தனது செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் அண்மைய மாதங்களாக நாடெங்கும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

Wed, 01/23/2019 - 01:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை