கோப் குழு தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி நியமனம்

Rizwan Segu Mohideen
கோப் குழு தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி நியமனம்-Sunil Handunnetti Re Appointed as COPE Committee Chairman

பாராளுமன்ற பொதுநிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப் - COPE) குழுவின் தலைவராக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற பொதுநிறுவனங்கள் தொடர்பான குழுவின் தலைவராக சுனில் ஹந்துன்நெத்தி நியமிக்கப்படும் மூன்றாவது முறை இதுவாகும். கடந்த 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கோப் குழு தலைவராக நியமிக்கப்பட்ட அவர், மீண்டும் அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றில் இன்றைய தினம் (22) குறித்த குழு கூடியதை அடுத்து, அதன் உறுப்பினர்கள் அனைவரும் சுனில் ஹந்துன்நெத்தியை கோப் குழு தலைவராக நியமிக்க முடிவு செய்தது.

குறித்த குழுவில் தலைவர் உள்ளிட்ட 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்குவதோடு, அதில் ஶ்ரீ லங்க முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, சுஜீவ சேனசிங்க, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அஜித் பீ பெரேரா, வசந்த அலுவிஹாரே, ரஞ்சன் ராமநாயக்க, அசோக் அபேசிங்க, அநுர பிரியதர்ஷன யாபா, லக்ஸ்மன் செனவிரத்ன, சந்திரசிறி கஜதீர, மஹிந்தானந்த அலுத்கமகே, தயாசிறி ஜயசேகர, ரவீந்திர சமரவீர, ஜயந்த சமரவீர ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

தான் மீண்டும் கோப் குழு தலைவராக நியமிக்கப்பட்டமை தொடர்பில், பாராளுமன்றத்தில் நன்றி தெரிவித்து உரையாற்றிய சுனில் ஹந்துன்நெத்தி, கோப் அறிக்கை பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அத்துடன், பிணை முறி மோசடி தொடர்பில், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில் அதனுடன் இணைந்தவாறான கோப் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததாக சுட்டிக்காட்டியதோடு, அதன் பிரதிபலன் என்ன எனவும் கேள்வியெழுப்பினார். பிணை முறி தொடர்பில் தாம் பல விரிவான விளக்கங்களை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிற்கு வழங்கியதாக, கோப் குழு முன்னிலையில் சாட்சியமளித்த அதிகாரிகள் சிலர் தெரிவித்ததாகவும் கூறினார்.

Tue, 01/22/2019 - 17:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை