பாதிக்கப்பட்டோருக்கு முழுமையான நட்டஈடு

முதற்கட்டமாக ரூ 10 ஆயிரம் கொடுப்பனவு  

இழப்புகளை மதிப்பிட விசேட குழு
அமைச்சர் மத்தும பண்டார நிலைமைகளை நேரில் ஆராய்வு

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நஷ்டஈடுகளை வழங்குவதற்குத் தேவையான முழுத்தொகையும் வழங்கப்படும் என பொதுநிர்வாக மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

வெள்ளத்தினால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஏற்பட்ட அழிவுகள் குறித்த மதிப்பீடுகள் பற்றிய அறிக்கை கிடைத்தவுடன் நஷ்டஈட்டை வழங்குவதற்கான நிதி விடுவிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வெள்ளப்பாதிப்புக்களைப் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை ஆராயும் நோக்கில் பொதுநிர்வாக மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்றையதினம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்தார். கிளிநொச்சி மாவட்ட  செயலகத்தில் அனர்த்தம் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சிவஞானம் சிறிதரன் ஆகியோரும், இடர்முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் அமலநாதன், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அனர்த்த நிலைமைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்துகொண்ட அமைச்சர், மக்களுக்குத் தேவையான உடனடியான நிவாரண உதவிகளை வழங்குமாறும் பணிப்புரை விடுத்தார். இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள் தொடர்பில் விசேட குழு நியமிக்கப்பட்டு விரைவாக அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

வெள்ளப்பாதிப்புக்களை மதிப்பிடுவதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு அதன் மூலம் விரைவாக மதிப்பீடு செய்யப்பட்டு உதவிகள் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், பாதிப்புக்கள் பற்றிய மதிப்பீட்டு அறிக்கைகள் கிடைத்த பின்னர் உரிய நஷ்டஈடுகள் வழங்கப்படும் என்றும் கூறினார். எனினும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான சகல நிதியையும் மத்திய அரசாங்கம் வழங்கும் என்ற உறுதிமொழியையும் அவர் வழங்கினார்.

இலங்கை பிரஜைகள் அனைவரும் அனர்த்தத்தை எதிர்கொள்ளலாம் என்ற அடிப்படையில் அவர்களுக்கு காப்புறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் வெள்ள அனர்த்தம் காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்களுக்கு முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பின்னர் வீட்டின் சேதம் மதிப்பீடு செய்யப்பட்டு 2.5 மில்லியன் வரை இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இடர்முகமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் அமலநாதன் விளக்கமளித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகள் தற்காலிக வீடுகளே. எனவே, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒரு தீர்மானித்த தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும். அதுவே பொருத்தமானதாக இருக்கும் என புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரதீபன் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். இது கொள்கை ரீதியாக தீர்மானிக்கப்பட வேண்டிய விடயம் என்பதுடன், பாராளுமன்றமே இது பற்றித் தீர்மானிக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் பெய்த கடும் மழையால் கிளிநொச்சி மாவட்டத்தில் 10889 குடும்பங்களைச் சேர்ந்த 35808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 நலன்புரி நிலையங்களில் 2064 குடும்பங்களைச் சேர்ந்த 6882 பேரும் நண்பர்கள் உறவினர்களின் வீடுகளில் 755 குடும்பங்களைச் சேர்ந்த 2592 பேரும் உள்ளனர். அதேநேரம், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலக பிரிவுகளைக் கொண்ட 77 கிராம அலுவலர் பிரிவுகளில் 6250 குடும்பங்களைச் சேர்ந்த 20737 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் 28 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்திக்கும் நோக்கில் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம் மற்றும் முரசுமோட்டை முருகானந்தா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையம் ஆகியவற்றுக்கும், முல்லைத்தீவில் உள்ள நலன்புரி முகாமுக்கும் அமைச்சர் விஜயம் செய்தார். மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கேட்டறிந்துகொண்ட அமைச்சர், நிவாரணப் பொருட்கள் சிலவற்றையும் கையளித்தார். கடன்பெற்று மேற்கொண்ட விவசாயம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாகவும், இதிலிருந்து மீள்வதற்கு அரசாங்கம் உதவிகளை வழங்க வேண்டும் எனவும் மக்கள் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டனர். அரசாங்கம் நிச்சயமாக இதுவிடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் என்ற உறுதிமொழியையும் அமைச்சர் வழங்கினார்.

 கிளிநொச்சி, பரந்தன், மாங்குளம் குறூப் நிருபர்கள்

Tue, 12/25/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை