புத்தம்புது எதிர்காலத்திற்கான மகிழ்ச்சிகரமான தருணம்

ஜனாதிபதி நத்தார் வாழ்த்து

சமாதானம், சகவாழ்வு ஆகிய நற்குணங்களின் மகிமையைப் போற்றும் இயேசு பிரானின் செய்தியினை மீள் ஒலிக்கச் செய்யும் மகிழ்ச்சிகரமான பொழுதிலேயே நத்தார் உதயமாகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அச் செய்தியில், மனித இனத்தை இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி கொண்டு செல்வதற்காக இவ்வுலகில் அவதரித்த இயேசு பிரானின் பிறப்பினைக் கொண்டாடும் உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் புத்தம்புது எதிர்காலத்திற்கான எதிர்பார்ப்புகளுடனேயே நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

கிழக்கு வானில் தோன்றி ஞானிகளுக்கு வழிகாட்டிய நட்சத்திரம் அவர்களுக்கு முன் சென்று பாலகன் இயேசு பிறந்த மாட்டுத் தொழுவத்திற்கு மேல் உதித்த அந்த இரவானது, அளவற்ற அன்பின் செய்தி யையே சுமந்து வருகின்றது.

இயேசு நாதர் தம் வாழ்நாள் முழுவதிலும் பாசமும் நேசமுமிக்க வார்த்தைகளையே உபயோகித்தார். மீனவர்கள், தச்சர்கள், கமக்காரர்கள் போன்ற சாதாரண பாமர மக்களுடனேயே அவர் உரையாடி வந்தார்.

“கண்ணுக்குக் கண் பழி வாங்குதல் என்றும் கல்லால் தாக்கப்படின் மலையைக் கொண்டு திருப்பித் தாக்கி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றுமே இதுவரை உங்களுக்கு போதிக்கப்பட்டு வந்திருக்கின்றது.

ஆயினும் எதிரியின் மீதும் அன்பைச் செலுத்துங்கள். உம்மை வெறுப்போர் மீதும் இம்சிப்போர் மீதும் நீ பாசத்தை செலுத்து” என்பதே அவரது போதனைகளாகும்.

நத்தார் என்பது இத்தகைய உயரிய நோக்கத்தைக் கொண்ட உன்னதமானவரின் அளவற்ற நற்குணங்களை மீண்டும் மீண்டும் நினைவுகூரும் காலமாகவே அமைகின்றது. ஆகையால், இயேசு கிறிஸ்துவின் அக்கொள்கையினை நிலைநாட்ட திடசங்கற்பம் கொள்ள வேண்டியது எம்மவரின் கடமையாகும். அழிவை நோக்கி அகன்ற வாயில் வழியே செல்லத் துடிப்பவர்களுக்கு நத்தார் பண்டிகையானது, புதியதோர் வாழ்க்கையை நோக்கி பயணிப்பதற்கான வழியாகவே அமைகின்றது. சக மனிதர்களை ஏமாற்றி தீய எண்ணங்களோடு வாழும் மனிதர்கள் அவற்றை விடுத்து நற்குணமுடையவர்களாக மாறாதுவிடின், அவர்களால் ஒருபோதும் சுவர்க்க வாயிலை அடைய முடியாது என்றே இயேசு நாதர் போதித்துள்ளார்.

அமைதி, கருணை, மனித நேயம் போன்ற இவ்வுலக வாழ்க்கையின் உயர்விற்கான பண்புகளைப் போதிக்கும் இயேசு பிரானின் போதனைகளும் மனிதாபிமானம், சகவாழ்வு, தியாகம் பற்றிய அவரது நற்செய்திகளும் இந்த நத்தார் காலத்தில் நாடெங்கிலும் எதிரொலிக்கட்டும்!

இலங்கைவாழ் கிறிஸ்தவ மக்களுக்கும் உலகெங்கிலும் பரந்துவாழும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் எனது மகிழ்ச்சிகரமான இனிய நத்தார் வாழ்த்துக்கள்.

Tue, 12/25/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை