நான்காவது முறையாக பிரதமராகிறார் ஹசீனா

பங்களாதேஷின் ஆட்சி மீண்டும் ஹசீனா வசம்

பங்களாதேஷில் நடந்த தேர்தலில் ஆளும் அவாமி லீக் தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா 4 வது முறையாக பிரதமர் ஆகிறார். 

பங்களாதேஷ் நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. அங்கு ஆளும் அவாமி லீக் கட்சிக்கும் கலீதா ஜியாவின் பங்களாதேஷ் தேசிய வாத கட்சிக்கும்தான் கடும் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 1,848 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

நேற்று காலை 8 மணியளவில் வாக்குப் பதிவு தொடங்கியது. தேர்தலை முன்னிட்டு வன்முறை சம்பவங்கள் நடக்காமல் தடுக்க ராணுவ வீரர்கள், துணை ராணுவ படையினர் ஏராளமானோர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். இருந்தும் அங்கு நடந்த தேர்தல் தொடர்பான வன்முறையில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமர் ஆவார் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தன. 

பின்னர் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. ஷேக் ஹசீனா, தான் போட்டியிட்ட கோபால் கஞ்ச்-3 தொகுதியில் 2,29,539 வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பங்களாதேஷ் தேசியவாத கட்சி வேட்பாளருக்கு வெறும் 123 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 

தேர்தல் நடந்த 299 தொகுதிகளில் 266 தொகுதிகளை அவாமி லீக் கட்சியும் அதன் கூட்டணி கட்சியான ஜதியா கட்சி 21 இடங்களையும் கைப்பற்றியுள்ளதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சி கூட்டணி வெறும் 7 இடங்களை மட்டும் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து ஷேக் ஹசீனா, நான்காவது முறையாக பங்களாதேஷ் பிரதமராகிறார். இவர் தொடராக மூன்று முறை பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரதமராக..

1996 - 2001- முதலாவது பிரதமர் பதவிக் காலம்
2008 - 2014- இரண்டாவது பிரதமர் பதவிக் காலம்
2014 - 2018 - மூன்றாவது பிரதமர் பதவிக் காலம்

எதிர்க்கட்சித் தலைவராக...

2001- 2008 வரை எதிர்க்கட்சி தலைவர்

Mon, 12/31/2018 - 11:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை