சபையில் மோசமாக செயல்பட்டவர்கள் சபாநாயகர் ஆசனத்துக்கு முன்னால் மன்னிப்பு கேட்க வேண்டும்

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

கடந்த பாராளுமன்ற அமர்வு வாரங்களில் சபையில் மோசமாக நடந்துகொண்ட உறுப்பினர்கள் சபாநாயகர் ஆசனத்துக்கு முன்னால் மன்னிப்புக் கோரவேண்டும் என ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

சபாநாயகரை மோசமான வார்த்தைகளைக் கொண்டு திட்டியவர்கள் தற்பொழுது எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்குக் கிடைத்தவுடன் சகலவற்றையும் மறந்து செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிமல் ரத்னாயக்க எம்.பி இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் பகலில் மஹிந்த ராஜபக்‌ஷவுடனும், இரவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் இருக்கும் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

இவர்கள் ஒக்டோபர் 26ஆம் திகதியின் பின்னர் பாராளுமன்றத்தில் நடந்துகொண்ட விதத்தை பார்க்க வேண்டும்.

சபாநாயகரின் ஆசனத்தை இழுத்து வீழ்த்தி, அக்ராசனத்தில் தண்ணீரை ஊற்றி சபைக்குரிய மரியாதையை வழங்காது செயற்பட்டனர். அது மாத்திரமன்றி சபாநாயகரை திட்டக்கூடாத வார்த்தைகளால் திட்டியதுடன், பாராளுமன்றத்துக்கு வெளியேயும் சபாநாயகரை விமர்சித்து வந்தனர்.

அது மாத்திரமன்றி எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் கடந்த மூன்றரை வருடங்களாக பாராளுமன்றத்தில் தமது ஆசனங்களில் அமர்ந்ததைவிட சபையின் நடுவில் வந்து நின்ற நாட்களே அதிகம். இவர்கள் தற்பொழுது சபைநடுவில் வந்து சபாநாயகர் ஆசனத்துக்கு முன்னால் முழந்தாளிட்டு மன்னிப்புக் கோரவேண்டும் என்றார்.

Thu, 12/20/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை