கிளிநொச்சி, முல்லைத்தீவில் படையினர் வசமிருந்த 45 ஏக்கர் காணிகள் நேற்று விடுவிப்பு

  • ஆவணங்கள் அரச அதிபர்களிடம் கையளிப்பு

கிளிநொச்சி குறூப், பரந்தன் குறூப் நிருபர்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 40 ஏக்கர் காணியும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 5 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆவணங்கள் நேற்று(19) கையளிக்கப்பட்டன.

இராணுவத்தினரால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்களிடம் இந்த ஆவணங்கள் நேற்று கையளிக்கப்பட்டன.

கிளிநொச்சியிலுள்ள இராணுவத்தினரின் நல்லிணக்க கேந்திர நிலைய மண்டபத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்திற்குரிய 40 ஏக்கர் காணிகளுக்கான ஆவணங்கள் கிளிநொச்சி அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடமும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 ஏக்கர் காணிக்குரிய ஆவணங்கள் முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடமும் கிளிநொச்சி படைகளின்

கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரால்ப் நுகரவினால் கையளிக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலக பிரிவுகளிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, துணுக்காய் பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன.

விடுவிக்கப்பட்ட முல்லைத்தீவு காணிகள் எதிர்வரும் 27 வட மாகாண ஆளுநர் மூலம் உரியவர்களிடம் கையளிக்கப்படும் என முல்லைத்தீவு அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு கிளிநொச்சியிலும் விரைவில் குறித்த இக் காணிகளை ஆளுநர் மூலம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிளிநொச்சி அரச அதிபரும் தெரிவித்துள்ளார்.

Thu, 12/20/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை