லயன் ஏர் விமானத்தின் குரல் பதிவு பெட்டியை மீட்கும் முயற்சி தாமதம்

ஜாவா கடலில் மூழ்கிய லயன் ஏர் விமானத்தின் விமானி அறைக் குரல் பதிவுப் பெட்டிக்கான தேடல் பணி மோசமான வானிலை காரணமாக தற்போது தடைப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 29 அன்று நேர்ந்த விபத்தில் விமானத்திலிருந்த 189 பேரும் உயிரிழந்தனர். விபத்து நேர்ந்த மூன்று நாட்களுக்குப் பின் விமானத்தில் இருந்த தகவல் பதிவுப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் பதிவான விபரங்களைக் கொண்டு விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிக காலம் பிடிக்கும். மற்றொரு பெட்டியான குரல் பதிவுப் பெட்டியை மீட்க 2.6 மில்லியன் டொலர் செலவில் தேடல் பணிகளைத் ஆரம்பிக்கவுள்ளதாக அந்த விமானசேவை கூறியது.

தேடல் பணிக்காக சிறப்பு கப்பல் ஒன்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் மோசமான வானிலை காரணமாக அது ஜொகூர் பாரு துறைமுகத்தில் சிக்கிக்கொண்டுள்ளது.

குரல் பதிவுப் பெட்டியின் இருப்பிடத்தைக் காட்டுவதற்காக பொருத்தப்பட்டிருக்கும் கருவி 90 நாட்கள் மட்டும்தான் இயங்கும்.

தேடல் பணிகளுக்காக விமான நிறுவனங்கள் செலவு செய்வது வழக்கத்தில் இல்லாதது. பொதுவாக அந்தந்த நாட்டு அரசாங்கங்களே அதற்கான செலவை ஏற்றுக்கொள்ளும்.

ஆனால், இந்தோனேசியாவில் நிலவும் நிதிப் பிரச்சினை காரணமாக, குரல் பதிவுப் பெட்டியை மீட்கும் பணி தாமதமடைந்துள்ளதாக இந்தோனேசியப் புலனாய்வாளர்கள் கடந்த வாரம் கூறியிருந்தனர்.

Tue, 12/18/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை