வடகொரியாவின் மூவர் மீது அமெரிக்கா புதிய தடைகள்

ஒரு வட கொரிய அமைச்சர் மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த இரண்டு உயரதிகாரிகள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. இவர்களில் ஒருவர் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு மிகவும் நெருக்கமானவராவார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதையை நிரந்தரமாக மூடிவிடும் என்று வட கொரியா கூறியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை தயாரித்த ஓர் அறிக்கையில் இந்த மூவர் மீதும் அடுக்கடுக்கான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கையை எடுப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த கோடை காலத்தில் அமெரிக்க – வட கொரிய தலைவர்களிடையே சிங்கப்பூரில் நடந்த நேரடிப் பேச்சுவார்த்தை இரு நாடுகளின் உறவில் புதிய பாதையின் தொடக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அது முதல் வட கொரியா மேற்கொண்ட சில நடவடிக்கைகள் இரு நாட்டு உறவில் பதற்றத்தைத் தணிப்பதாக இருந்தன. ஆயினும் சில தருணங்களில் கோபமான பேச்சுகளில் வட கொரியா ஈடுபட்டே வந்தது.

இரு நாட்டுத் தலைவர்களிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும் என்று கூறப்பட்டது. இந்த யோசனை தமக்கு விருப்பம் என்றபோதும் அந்தப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு அவசரம் ஏதும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மையில் தெரிவித்தார்.

அமெரிக்க பாராளுமன்றமான கொங்கிரசில் சமர்ப்பிப்பதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறை அவ்வப்போது வட கொரியா குறித்து அறிக்கை தயாரிக்கும். அப்படித் தயாரிக்கப்பட்ட ஓர் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

இதன்படி, கிம்மின் வலதுகரமாக செயல்படும் சோ ரியோங் ஹே, வட கொரிய பாதுகாப்பு அமைச்சர் ஜோங் க்யோங்-தாயெக், தகவல் பரப்பல் துறை அலுவலர் பாக் க்வாங் ஹோ ஆகிய மூவரின் அமெரிக்க சொத்துகளைப் பறிமுதல் செய்யப்போவதாக அமெரிக்கா கூறுகிறது.

Tue, 12/18/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை