வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கென விசேட ஆணைக்குழு

பிரதமருடன் பூர்வாங்க பேச்சுவார்த்தை

வடக்கு, கிழக்கின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு விசேட ஒழுங்குமுறையொன்று தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் முதற்கட்டமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று கூட்டமொன்று நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம், வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான பொறுப்பை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுள்ளமை தொடர்பிலும், எதிர்காலத்தில் அதற்கான திட்டங்கள் குறித்தும் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்ட பதிலை வழங்கினார்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் ஆணைக்குழு ஒன்றை நியமிப்பது தொடர்பில் பிரதமரிடம் யோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதுடன், ஆணைக்குழுவை அமைப்பதற்கும் பிரதமர் முன்வந்துள்ளார். பிரதமர் பதவியேற்ற பின்னர் இது தொடர்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான இறுதித் தீர்மானம் ஒன்றை எட்டுவது குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடியிருந்தோம். இதற்காக ஒழுங்குமுறையொன்றை தயாரித்து அதன் அடிப்படையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒக்டோபர் 26ஆம் திகதியின் பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பத்திற்கு பின்னர் அமைந்துள்ள ஐ.தே.மு அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கத் தீர்மானித்தது. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் என வழங்கிய உறுதிமொழிக்கு அமையவே கூட்டமைப்பின் இந்த ஒத்துழைப்பு பிரதமருக்குக் கிடைத்தது. அது மாத்திரமன்றி மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு,கிழக்கு அபிவிருத்திக்கான அமைச்சுப் பொறுப்பையும் பிரதமரே ஏற்றுக் கொண்டார்.

இவ்வாறான நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பிரதமருடன் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரந்தன் குறூப் நிருபர்

 

Tue, 12/25/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை