2nd Test: SLvNZ; பந்து வீச்சுக்கு சாதகமான கிரிஸ்ட்சேர்ச்சில் இலங்கை சாதிக்குமா

Azaff Mohamed
2nd Test: SLvNZ; பந்து வீச்சுக்கு சாதகமான கிரிஸ்ட்சேர்ச்சில் இலங்கை சாதிக்குமா-2nd Test-SLvNZ-Will Sri Lanka Achieve Christchurch

அபாரமான பிரிக்கப்படாத இணைப்பாட்டம் மூலம் தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு முதலாவது டெஸ்ட் போட்டியை வெற்றி தோல்வியின்றி நிறைவு செய்த இலங்கை அணி கிரிஸ்ட்சேர்ச் மைதானத்தில் 2 ஆவது போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளைய தினம் (26) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இத்தொடரில் இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியை 282 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தி, டொம் லதமின் 264 ஓட்டங்களின் உதவியுடன் நியூசிலாந்து அணி 578 எனும் இமாலய ஓட்ட இலக்கை குவித்தமை என முதல் மூன்று நாட்களையும் முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த நியூசிலாந்து அணியே வெற்றி பெறும் என கிரிக்கெட் வர்ணனையாளர்கள் எதிர்வு கூறியிருந்தனர்.

எனினும் மெத்திவ்ஸ், மெண்டிஸ் ஆகியோரின் பிரிக்கப்படாத 274 ஓட்ட இணைப்பாட்டத்தின் உதவியுடன் இலங்கை அணி முதல் டெஸ்ட் போட்டியை சமநிலையில் முடித்து அபாரமான மீளெழுச்சியை வெளிக்காட்டியிருந்தது.

குறிப்பாக அஞ்சலோ மெத்திவ்ஸ் கடந்த போட்டியில் இலங்கை அணியின் முதுகெழும்பாக செயற்பட்டமை மறுக்க முடியாத உண்மையாகும்.

முதலாவது இன்னிங்ஸில் 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் இழந்த நிலையில் தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்த இலங்கை அணியை திமுத் கருணாரத்னவுடன் இணைந்து மெத்திவ்ஸ் மீட்டெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 139 எனும் இணைப்பாட்டம் இருவருக்கும் இடையில் பகிரப்பட்டதுடன் மெத்திவ்ஸ 83 ஓட்டங்களைக் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இன்னிங்ஸிலும் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸ் தோல்வியின் விளிம்பிலிருந்த இலங்கை அணியை பிரிக்கப்படாத 274 எனும் பிரிக்கப்படாத இணைப்பாட்டம் மூலம் அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் குசல் மெண்டிஸ் ஜோடி இலங்கை அணியை மீட்டெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக 4 ஆம் நாள் முழுவதும் துடுப்பெடுத்தாடி இருவரும் வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெற்றதுடன் 5 ஆம் நாள் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு கொண்டு வரும் வரை இருவரும் சிறப்பாக ஆடி களத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது மெண்டிஸ் 141 ஓட்டங்களையும் மெத்திவ்ஸ் 120 ஓட்டங்களையும் பெற்றருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர நிரோஷன் திக்வெல்ல முதலாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் நியூசிலாந்து அணி துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு என சகல துறைகளிலும் அபாரம் காட்டியிருந்ததோடு, இரண்டாவது போட்டியிலும் இலங்கை அணிக்கு அவர்கள் சவாலாக அமைவார்கள் என்பதில் ஐயமில்லை. கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் ஆகியோர் அரைச்சதம் கடந்தமை குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சில் டிம் சவ்தி மற்றும் ட்ரென்ட் போல்ட் இலங்கை அணியை மிரட்ட தவறவில்லை . குறிப்பாக முதலாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய டிம் சவ்தி இரண்டாவது இன்னிங்ஸிலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இரண்டாவது போட்டி இடம்பெறவுள்ள ஆடுகளத்தில் இது மேலும் இலங்கை அணிக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றே கூறலாம்.

குறிப்பாக மிக பலவீனமான இலங்கை அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களுக்கு டிம் சவ்தி மற்றும் போல்ட் ஜோடி அச்சுறுத்தலாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை .

போட்டி நடைபெறவுள்ள மைதானம் உள்ள கிரிஸ்ட்சேர்ச்சில் 5 நாட்களுக்கும் மழை மேகம் காணப்படும் என்பதுடன் குளிராகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது மழையினால் போட்டி பாதிக்கப்படலாம் எனவும் வானிலை எதிர்வுகூறல் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பந்து வீச்சாளர்களுக்கு உசிதமான பச்சை நிறமான இம்மைதானத்தில் நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதில் ஐயமில்லை எனினும் மறுபுறம் இலங்கை அணி பந்து வீச்சாளர்கள் முதல் போட்டியில் செயல்பட்டதை விட சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். முதல் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் குறிப்படும்படியாக சிறப்பாக செயல்படவில்லை என்றே கூறலாம்.

எது எவ்வாறாயினும் முதல் போட்டியில் கிடைத்த உற்சாகத்துடன் இலங்கை அணியும் பந்து வீச்சு துடுப்பாட்டம் என சகல துறையிலும் அசத்திய நியூசிலாந்து அணியும் மோதவுள்ள இரண்டாவது போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இடம்பெறும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

இரண்டாவது போட்டி நாளை (26) இலங்கை நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 12/25/2018 - 19:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை