தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் துப்பாக்கிச் சூடு; 4 பேர் பலி

Rizwan Segu Mohideen

மேலும் ஐவர் காயம்; மீனவர் பிரச்சினை என சந்தேகம்

தங்காலை, குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அங்கிருந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகபொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதோடு, அவர்கள் தங்களை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு T56 ரக துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி (Pistol) ஆகியன பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக, அவர் தெரிவித்தார்.

மீனவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையே சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் இருவர் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் நேரடி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மாத்தறை, தங்காலை பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மரணமடைந்தவர்களின் சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Tue, 12/25/2018 - 09:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை