ஒருமித்த நாட்டை பாதுகாத்து முன்னெடுத்துச் செல்வோம்

பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள  முக்கியத்துவம் ஒரு எழுத்தாலும் மாற்றப்படாது

மகாநாயக்கர்களிடம் பிரதமர் உறுதி

புதிய அரசியலமைப்பை உருவாக்கும்போதோ அல்லது அரசியலமைப்பில் திருத்தம் செய்யும்போதோ நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பின் ஒன்பதாவது சரத்தில் பெளத்த மதத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் ஒரு எழுத்தால்கூட மாற்றம் செய்யப்படமாட்டாது என்பதுடன் ஒருமித்த நாட்டை பாதுகாத்து முன்னெடுத்துச் செல்வோமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களிடம் உறுதியளித்துள்ளார்.

இத் தீர்மானத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் ஏனைய கட்சிகளுடனும் இது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக பிரதமர் இதன்போது தெரிவித்தார்.மல்வத்து அஸ்கிரிபீட மகாநாயக்கர்களை நேற்று சந்தித்தபோதே பிரதமர் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.

நேற்றுக் காலை (28) கண்டி தலதா மாளிகைக்குச் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மத வழிபாடுகளில் ஈடுபட்டார். தலதா மாளிகைக்கு விஜயம் செய்திருந்த பிரதமரை தியவதன நிலமே மற்றும் பஸ்நாயக்க நிலமே ஆகியோர் வரவேற்று கெளரவமளித்தனர். அங்கு பிரதமருக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.

மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்நாட்டின் அரசியலமைப்பு மற்றும் மக்கள் ஆணையை பாதுகாப்பதற்காக மகாநாயக்க தேரர்கள் முன்னெடுத்த தீர்மானங்களுக்காக இச்சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு நன்றி கூறியதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம், குறிப்பாக கிராமத்துக்கு நிவாரணம் பெற்றுத் தருவதற்காக பல வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளமை பற்றியும் மகாநாயக்க தேரர்களிடம் எடுத்துக் கூறியதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இச் சந்தர்ப்பத்தில் பிரதமருடன் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, தயா கமகே, லக்கி ஜயவர்தன, ஜே.சி அலவத்துவல, மலிக் சமரவிக்கிரம உள்ளிட்ட பல மாகாண அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

Sat, 12/29/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை