கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கு குறுகிய கால அபி. திட்டம்

*கிளிநொச்சியில் பிரதமர் அறிவிப்பு
*31ம் திகதிக்குள் ரூ 10,000 நிவாரணம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கான துரித திட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாகவும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்படுமெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கிளிநொச்சியில் தெரிவித்தார்.

வெள்ளத்தால் சேதமடைந்துள்ள வீடுகளை சீரமைத்துக் கொள்வதற்கு 31 ஆம் திகதிக்கு முன்னர் 10,000 ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் ஏனைய நிவாரண உதவிகள் இரண்டு வாரங்களுக்குள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் பிரதமர் ரணில் நேற்று உறுதியளித்தார்.

நேற்று மாலை கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டதோடு மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்.

அங்கு அவர் கூறியதாவது, கடந்த சில தினங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் 38,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளின் அறிக்கைகள் மூலம் தெரிந்துகொண்டேன். பெருமளவு வீடுகள் அழிவுற்றன. விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளாக கருதப்படும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இந்த அனர்த்தம் மேலும் தாங்கிக்கொள்ள முடியாத பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நான் நன்கறிவேன்.

என்றாலும் உங்களை நாம் ஒருபோதும் கைவிடப்போவதில்லை. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மாவட்டத்தைக் கட்டியெழுப்புவதற்கு குறுகிய கால துரித நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். இதுகுறித்து அடுத்த வாரத்தில் உயர்மட்ட மாநாடொன்றைக் கூட்டவிருக்கின்றேன். இதில் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியமானவர்கள் பங்கேற்பர். இதற்கிடையில் மத்திய அரசின் நேரடியான தலையீட்டுடன் அனைத்து நிவாரண உதவிகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

வெள்ள அச்சுறுத்தல் இன்னமும் தணியவில்லை. எனவே மக்கள் அவதானமாக இருக்கவேண்டும். இது விடயத்தில் அதிகாரிகள் கூடுதல் கவனம்செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களிலுள்ள அனைத்து மக்களுக்கும் நிலைமை சீரடையும்வரை உலர் உணவுப் பொருட்களை வழங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.

கொழும்பு மாநகர சபையின் அதிகாரிகள் மட்டத் தூதுக்குழுவொன்று நாளை (இன்று) இங்கு வருகைதரவுள்ளது. அவர்களும் நிவாரண உதவிகளை வழங்கவுள்ளனர்.

வங்கிக் கடன்களுக்கான வட்டியையும் நுண்கடனுக்கான வட்டியையும் இடைநிறுத்துமாறு பணித்துள்ளேன்.

அடுத்த கட்டமாக விவசாய நடவடிக்கைகளுக்கு உதவவும் கால்நடை வளர்ப்புக்களுக்கான உதவிகளையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் காப்புறுதித் திட்டத்தின் மூலமும் இழப்பீடுகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்பகுதியில் அனைத்து வீதிகளும் அழிவுற்றுள்ளன. அவற்றை விரைவாக திருத்துவதற்கும், புனரமைப்பதற்கும் தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு உட்பட அனைத்து அமைச்சுகளினதும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மீள் எழுச்சிக்காக ​நேரடி பங்களிப்பைப் பெற்றுத் தருவேன். அடுத்த வாரத்தில் சகல அமைச்சர்களும் இங்கு வருகை தரவுள்ளனர். வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவும் இரண்டொரு தினங்களுக்குள் இங்கே வருகைதரவுள்ளனர்.

வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுக்க பாடுபட்ட படையினர், பொலிஸார் மற்றும் உதவிகளை வழங்கிய அரச உயரதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் அனைத்துக்கும் அரசின் சார்பில் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கிளிநொச்சி குறூப், மாங்குளம் குறூப் நிருபர்கள்

Sat, 12/29/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை