இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு தீவிரம்: அச்சுறுத்தல் நிலை அதிகரிப்பு

விமானங்கள் திசை திருப்பம்

இந்தோனேசியாவில் 430 பேர் கொல்லப்பட்ட சுனாமி பேரலையை ஏற்படுத்திய அனக் க்ரகடோவா எரிமலை வெடிப்பின் எச்சரிக்கை நிலை அதிகரிக்கப்பட்டுள்ளதோடு அனைத்து விமானங்களும் திசைதிருப்பப்பட்டுள்ளன.

இந்த எரிமலை தீவில் ஏற்பட்ட சரிவே கடந்த சனிக்கிழமை சுமத்ரா மற்றும் ஜாவா கடற்கரைகளில் 5 மீற்றர் உயரத்திற்கு சுனாமி அலையை ஏற்படுத்தியது.

அனக் க்ரகடோவா பள்ளம் தொடர்ந்து பலவீனம் அடைந்திருப்பதாக எச்சரித்திருக்கும் அதிகாரிகள், மற்றொரு சரிவு மற்றும் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இதனால் கரையோரங்களில் இருந்து மக்கள் வெளியேறி இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோன்று பாரிய எரிமலை வெடிப்பு ஒன்று பற்றிய அச்சமும் நீடித்து வருகிறது.

இந்த எரிமலை கடந்த ஜூலை தொடக்கம் குமுறி வருவம் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் அதன் இயக்கம் தீவிரம் அடைந்து எரிமலை குழம்பு மற்றும் பாறைகளை கக்கிவருவதோடு 3000 மீற்றர் உயரத்திற்கு சாம்பல் புகையை வெளியேற்றி வருகிறது.

இந்நிலையில் எரிமலை வெடிப்புக்கான அச்சுறுத்தலை தேசிய வானிலை அவதானிப்பு நிலையம் இரண்டாவது உச்ச நிலைக்கு அதிகரித்திருப்பதோடு, தீவை சூழ 5 கிலோமீற்றர் பகுதி தடை வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “கடந்த டிசம்பர் 23 தொடக்கம் இயக்கம் நிற்கவில்லை. இந்த நிலை மேலும் விரிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று புவியியல் ஆய்வு நிறுவனத்தின் செயலாளர் அன்டோனியஸ் ரட்டொமோபர்போ குறிப்பிட்டுள்ளார்.

ஜாவா மேற்குக் கரை பகுதிகளில் கட்டடங்கள், வாகனங்கள் மற்றும் தாவரங்கள் எங்கும் கடந்த புதன்கிழமை தொடக்கம் எரிமலை சாம்பல் மூடியுள்ளது.

இந்த சாம்பல் ஆபத்து இல்லை என்றபோதும் வெளியே வருபவர்கள் முகம்மூடி மற்றும் கண்ணாடி அணிந்து கொள்ளும்படி நிர்வாகம் மக்களை அறிவுறுத்தியிருப்பதோடு விமானங்களும் தமது பயணப்பாதையை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“க்ரகடோவா எரிமலை சாம்பல் குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து அனைத்து விமானங்களும் திசை திருப்பப்பட்டன” என்று அரச விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும் இந்த எரிமலை சாம்பலால் எந்த விமானநிலையமும் பாதிக்கப்படவில்லை என்று சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

தலைநகர் ஜகார்த்தா இந்த எரிமலையில் இருந்து கிழக்காக சுமார் 155 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது.

இந்த எரிமலை 1883 ஆம் ஆண்டு வெடித்தது நவீன வரலாற்றில் மிகப்பெரிய வெடிப்பாக கருதப்படுகிறது. இதன்போது ஏற்பட்ட பங்கர சுனாமியால் 36,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதோடு, இதன் சாம்பல் காரணமாக உலகின் மேற்பரப்பு தட்ப வெப்பநிலை ஒரு செல்சியஸால் குறைந்தது.

1927 ஆம் ஆண்டு அனக் க்ரகடோவா தீவு தோன்றியதோடு அது தொடக்கம் அந்த தீவு வளர்ந்து வருகிறது.

அதிக பூகம்பங்கள் ஏற்படும் இடத்தில் இருக்கும் இந்தோனேசியா, கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலான காலத்தில் இந்த ஆண்டே அனர்த்தங்களால் அதிக உயிரிழப்பை எதிர்கொண்டுள்ளது.

கடந்த ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் லொம்பொக் தீவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த பூகம்பங்களால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதோடு, செப்டெம்பரில் சுலவெசி தீவில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால் 2,000க்கும் அதிகமானோவர் உயிரிழந்தனர்.

Fri, 12/28/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை