கண்ணீரில் நனைந்தது சுனாமி பூமி

உறவினர்கள் கதறியழுது நினைவுத்தூபிகளில் மலரஞ்சலி

சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 14 வருட நினைவு நிகழ்வுகள் நேற்று வடக்கு, கிழக்கு கரையோரங்கள் உட்பட நாடு முழுவதிலும் மிகவும் உணர்வுபூர்வ மாக அனுஷ்டிக்கப்பட்டன. நேற்றுக் காலையிலேயே மதரீதியான அனுஷ்டானங்க ளை முடித்துக் கொண்டு நினைவுத்தூபிகள் அமைந்திருக்கும் இடங்களுக்குச் சென்ற மக்கள் உயிரிழந்த தமது உறவுகளை நினைத்து மலரஞ்சலி செலுத்தியதுடன், நினைவிடங்களில் ஒப்பாரிவைத்து கதறியழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது.

மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்க ளின் கரையோரங்கள் நேற்று சோகமயமா கக் காணப்பட்டன.

நினைவுத் தூபிகள் அமைந்திருக்கும் இடங்களில் அழுகுரல் கள் கேட்ட வண்ணமிருந்தன. சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 14 வருடங்கள் கடந்துள்ள போதும் உயிரிழந்த உறவுகளை நினைத்து உறவினர்கள் வடித்த கண்ணீர் இதயங்களைக் கனக்கச் செய்திருந்தன.

2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கிய டிசம்பர் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு ஆண்டு தோறும் நினைவு நிகழ்வுகளும், அனர்த்த விழிப்பு ணர்வு நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன. இதற்கு அப்பால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள்,சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபிகளில் மலரஞ்சலி செலுத்தி உறவுகளை நினைவுகூர்ந்தனர்.

தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான நிகழ்வு, சுனாமி பேரலை தாக்கத்துக்கு உள்ளாகி ரயில் விபத்துக்குள்ளான காலி, பெரலிய பகுதியில் நடைபெற்றது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பாது காப்பு படையினர்,சுனாமியால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என பலரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

வழமைபோல சுனாமி பேரலைத் தாக்குதலுக்கு உள்ளான ரயில் வண்டி காலை 9.25 மணி முதல் 9.27 மணிவரை இரண்டு நிமிட நேரம் அப்பகுதியில் தனது பயணத்தை நிறுத்தி மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் பயணத்தைத் தொடர்ந்தது.

அது மாத்திரமன்றி நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இரண்டு நிமிடங்கள் சகலரும் மௌன அஞ்சலி செலுத்தினர். அரசாங்க நிறுவனங்களில் தேசியக் கொடி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், வீதிகளில் பயணித்தவர்கள் தமது வாகனங்களை நிறுத்தி தமது மௌன அஞ்சலியைச் செலுத்தினர். சுனாமி தாக்கத்துக்கு உள்ளாகாத மலையகப் பகுதிகளிலும் மக்கள் வீதிகளில் நின்று இரண்டு நிமிட மௌன அஞ்சலியை செலுத்தியதுடன், சுனாமி நினைவு நிகழ்ச்சிகள் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டிருந்தனர்.

சுனாமி பேரலைத் தாக்கம் இடம் பெற்று 14 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள போதும் நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு கரையோர பகுதிகள் நேற்று சோகமாகக் காணப்பட்டன. குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும், காலி,மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட் டை ஆகிய மாவட்டங்களின் கரையோர பகுதிகளிலும் சுனாமி நினைவு நிகழ்வுகளும், மத ரீதியான நிகழ்வுகளும் இடம்பெற்றன. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்துவாழும் பகுதிகளில் பள்ளி வாசல்களில் விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றதுடன், இந்துக்களும் உயிரிழந்த தமது உறவுகளுக்காக விரதமிருந்து பிதிர்க்கடன் செலுத்தியது டன், நினைவுத்தூபிகள் அமைந்திருக்கும் பகுதிகளில் தீபங்கள் ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

நினைவுத் தூபிகளில் வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளின் புகைப்படங்களைக் கட்டியணைத்தவாறும், உயிரிழந்தவர்கள் புதைக்கப்பட்ட நினைவிடங்களில் புரண்டும் கண்ணீர் விட்டழுது தமது சோகத்தை வெளிக்காட்டியமை மிகவும் உருக்கமாக இருந்தது. பாண்டிருப்பு பகுதி மக்கள் கடலுக்குள் மலர்தூவி தமது அஞ்சலியைச் செலுத்தியிருந்ததுடன், கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் உயிரிழந்தவர்களின் நினைவாக இரத்ததான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

வடக்கு மாகாணத்தில் மழைக்கு மத்தியிலும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் மழையையும் பொருட்படுத் தாது அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

மகேஸ்வரன் பிரசாத்

Thu, 12/27/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை