கிளிநொச்சி, முல்லைத்தீவில் பாதிக்கப்பட்டோர் தொகை 51,075 ஆக அதிகரிப்பு

54 இடைத்தங்கல் முகாம்களில்
9,566 பேர் தஞ்சம்

நிவாரணப் பணிகள் ஆரம்பம்

அனர்த்த தடுப்பு பணியில் இராணுவம், கடற்படை

கடும் மழை, வெள்ளம் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51,075 பேராக மேலும் அதிகரித்துள்ளது. என்றாலும் நேற்று வெள்ளநீர் வடிந்தோட ஆரம்பித்துள்ளதுடன் இப்பகுதிகளில் காலநிலை சீராகவே காணப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 3,338 குடும்பங்களைச் சேர்ந்த 31,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் 6,254 குடும்பங்களைச் சேர்ந்த19,841 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு அரசாங்க அதிபர்களான சுந்தரம் அருமைநாயகம், ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோருடன் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையங்களும் இதனை உறுதி செய்துள்ளன.

கிளிநொச்சியில் 26 இடைத்தங்கல் முகாம்களில் 1,394 குடும்பங்களைச் சேர்ந்த 4,649 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 28 இடைத்தங்கல் முகாம்களில் 1,623 குடும்பங்களைச் சேர்ந்த 4,932 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் இரணைமடுக்குளத்தில் 36 அடி நீர் கொள்ளளவு கொண்டதாக இருந்த போதிலும் வெள்ளம் காரணமாக 39 அடியை தாண்டியதால் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டன. நேற்று மாலை நீர்மட்டம் 36.6 அடியாக குறைந்திருந்த நிலையில் 35 அடியாக குறைவடைந்ததும் வான்கதவுகளை மூடுவதற்கு நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தீர்மானித்துள்ளார்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் வன்னிக்குளம் மற்றும் முத்தையன்கட்டு குளங்கள் நிரம்பியுள்ளதுடன் நேற்று மாலையுடன் முத்தையன்கட்டு குளத்தின் வான்கதவுகள் மூடப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளன. முத்தையன்கட்டு குளத்தில் திறக்கப்பட்ட நீர் நந்திக்கடல் வழியாக வழிந்தோடியுள்ளது.

வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அதிகளவு மழைவீழ்ச்சி ஏற்பட்டதால் மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதிகளும் பாதிக்கப்பட்டன. இங்கு 365 மி. மீற்றர் மழை பதிவாகியிருந்தது.

ஒட்டுசுட்டான், கரைந்துரைப்பற்று, மாந்தை கிழக்கு, துணுக்காய், புதுக்குடியிருப்பு, மணலாறு போன்ற பகுதிகளிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில்,

1,021குடும்பங்களை சேர்ந்த 3,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 10 பாதுகாப்பான அமைவிடங்களில் 419 குடும்பங்களை சேர்ந்த 1,523 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில்,

7,386 குடும்பங்களை சேர்ந்த 24,032 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 11 பாதுகாப்பான அமைவிடங்களில் 821 குடும்பங்களை சேர்ந்த 2,556 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில்,

1,068 குடும்பங்களை சேர்ந்த 3,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 பாதுகாப்பான அமைவிடங்களில் 154 குடும்பங்களை சேர்ந்த 570 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நான்கு வீடுகள் முழுமையாகவும், 148 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அரச அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
பாரிய அனர்த்தங்களை தடுக்கும்
பணியில் இராணுவம், கடற்படை
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் (22) ஆம் திகதி முதல் இராணுவத்தினரும் கடற்படையினரும் இணைந்து வெள்ளத்தால் சிக்கியுள்ளோரை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்டெடுத்தல், இடைத்தங்கல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லுதல், சமைத்த உணவு வழங்குதல் மருத்துவ உதவி மற்றும் ஆரோக்கிய வசதிகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வழங்குதல் ஆகிய நடவடிக்கையில் இராணுவத்தினரும் கடற்படையினரும் கூட்டாக ஈடுபட்டுவருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள ரத்தினபுரம், ஆனந்தபுரம், கனகாம்பிகைக்குளம், மருதநகர், பன்னன்கண்டி, தர்மபுரம், புளியன் பொக்கனை, பரந்தன், குடியிருப்பு, உறியன், கண்டாவளை, மாங்குளம் ஆகிய இடங்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கண்காணிப்பிலும், மன்னங்கடல், கவ்வலகண்டல், கோடடிக்கல்லு, கனகரட்ணபுரம், வித்யாபுரம், உடையார்கட்டு, குருவில்குளம் ஆகிய இடங்கள் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கண்காணிப்பிலும் உள்ளன.

கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேராவின் உத்தரவின்பேரில் செயற்படும் படைத்தரப்பினர் ஒலுமடு மற்றும் புளிமுச்சிதருகுளம் அணைகள் உடைப்பெடுப்பதை தடுத்தனர். இந்த அணைக்கட்டுகள் உடைப்பெடுத்திருந்தால் பாரிய அனர்த்தம் ஏற்பட்டிருக்கும். அணைக்கட்டை சுற்றிய பகுதியில் மழை வெள்ளம் அதிகரித்த நிலையில் படையினர் மணல் மூடைகளை அடுக்கி அணை உடைப்பெடுப்பதை தடுத்தனர். ஒரு சில மணித்தியாலங்களில் படையினர் சுமார் ஆயிரம் மணல் மூடைகளை அடுக்கி ஆபத்தை தவிர்த்தனர்.

வெள்ள நீரில் பாதைகள் மூழ்கியுள்ளதையடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தின் பல இடங்கள் வெள்ளக்காடாகின. வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் நிர்க்கதியாகிய மக்கள் மரங்களிலும் மற்றும் உயரமான இடங்களிலும் தஞ்சமடைந்தனர். இராணுவனத்தினர் அவர்களைப் பாதுகாப்பாக காப்பாற்றியதுடன் மாடுகள், நாய்கள், பூனைகள் ஆகிய மிருகங்களைக் காப்பாற்றியுள்ளதுடன் அவைகளுக்கு உணவும் வழங்கினர்.

நிர்க்கதியாகிய மக்களை பாதுகாக்க இராணுவத்தினர் படகுகளை பயன்படுத்தினர். வயதானவர்கள் மற்றும் சிறுவர்களை இராணுவத்தினர் தமது தோள்களில் ஏந்திச் சென்றதையும் காண முடிந்தது. ஞாயிற்றுக்கிழமை (23) காலை வரை முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 700 பேர் வரை பாதுகாப்பான இடங்களில் அமர்த்தப்பட்டதுடன் அவர்களுக்கு உணவும் பொதிகளும்வழங்கப்பட்டன.

கிளிநொச்சிகுறூப், முல்லைத்தீவு குறூப் நிருபர்கள்
 

Mon, 12/24/2018 - 08:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை