நதமனறல கறறசசடட மறததர டனலட டரமப

- அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக முதல் முறை குற்றவியல் குற்றப்பத்திரம் தாக்கல்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றவியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தாம் குற்றமற்றவர் என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் தோல்வியின் பின்னர், அமெரிக்காவின் அணுவாயுதங்கள் குறித்த இரகசிய ஆவணங்கள் உட்பட சுமார் 300 இரகசிய ஆவணங்களை புளோரிடா மாநிலத்திலுள்ள ட்ரம்ப்புக்குச் சொந்தமான மார் ஏ லாகோ இல்லத்துக்கு எடுத்துச் சென்றார் என கடந்த வாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் நடத்தப்படும் மார் ஏ லாகோ இல்லத்தில் நடன அறை, படுக்கையறை, குளியலறைகளிலும் இந்த இரகசிய ஆவணங்கள் காணப்பட்டதாக, 49 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரை ட்ரம்ப் எதிர்நோக்கும் மிக சவால்மிக்க வழக்காக இது கருதப்படுகிறது. அதனால் அவர் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பாதிக்கப்படலாம்.

இந்த வழக்கில் மியாமியிலுள்ள நீதிமன்றத்தின் முன் தோன்றிய ட்ரம்ப் தான் தவறு செய்யவில்லை என்றும், வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (13) நீதிமன்றத்திற்குச் சென்ற பின் ட்ரம்ப் உணவகம் ஒன்றில் காணப்பட்டார். நீதிமன்ற வழக்கு சிறப்பாகப் போய்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

நேற்று தனது 77ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய ட்ரம்புக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத நிலையில் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வரலாற்றில், பதவியிலுள்ள அல்லது முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக மத்திய அரசின் குற்றவியல் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமை இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 06/15/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை