உக்ரைனிய தலைநகர் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மீண்டும் ஒருமுறை ஆளில்லா விமானம் மூலம் பாரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த ஆளில்லா விமானப் பாகங்கள் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக கீவ் மேயர் விடாலி கிளிச்கோ தெரிவித்துள்ளார். மேலும் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ரஷ்யா ஒட்டுமொத்தமாக உக்ரைன் இலக்குகள் மீது 54 ஆளில்லா விமானங்களை அனுப்பி இருப்பதோடு அதில் 52 சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைனிய விமானப்படை தெரிவித்தது.

ரஷ்யா உக்ரைன் மீது கடந்த 2022 பெப்ரவரியில் முழு அளவில் படையெடுப்பை நடத்தியது. அது தொடக்கம் அது உக்ரைன் தலைநகர் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்றுக் காலை உக்ரைனின் 12 பிராந்தியங்களில் வான் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதில் கடந்த சனிக்கிழமை (27) இரவு தலைநகருக்கு மேலால் 40க்கும் அதிகமான ஆளில்லா விமானங்கள் பறந்ததாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகரில் இரு வேறு மாவட்டங்களில் உள்ள இரு வானுயர் கட்டடங்கள் ஆளில்லா விமானப் பாகங்கள் விழுந்ததில் தீப்பிடித்ததாக நகர மேயர் தெரிவித்தார்.

தெற்கு ஹொசிவிக்சியில் மாவட்டத்தில் உள்ள களஞ்சியம் ஒன்றும் தீப்பற்றியதாக கீவ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1500 ஆண்டுகளுக்கு முன்னர் கீவ் நகர் நிறுவப்பட்டதன் கீவ் தினத்தை நகர மக்கள் கொண்டாட தயாராகும் நிலையில் ரஷ்யா வேண்டும் என்று அந்த நகர் மீது தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ரஷ்யாவுக்கு எதிரான பதில் தாக்குதல் நடத்த உக்ரைன் தயாராகி வரும் நிலையிலேயே தலைநகர் கீவ் நகர் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 05/29/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை