கைபேசியை மீட்க அணையின் நீரை இறைத்த அதிகாரி நீக்கம்

செல்பி எடுக்கும்போது விழுந்த ஸ்மார்ட் போனை எடுப்பதற்காக நீர் தேக்கத்தின் ஒட்டுமொத்த நீரையும் இறைக்க உத்தரவிட்ட இந்திய அதிகாரி ஒருவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

உணவு கண்காணிப்பு அதிகாரியான ராஜேஷ் விஷ்வாஸ் சட்டிகார் மாநிலத்தின் கன்கர் மாவட்டத்தில் உள்ள கார்கட்டா அணையில் செல்பி புகைப்படம் எடுக்கும்போது தனது ஸ்மார்ட் போனை தவறவிட்டுள்ளார்.

கடந்த வாரம் நிகழ்ந்த இந்த சம்பவத்தை அடுத்து முதலில் உள்ளூர் சுழியோடிகளைக் கொண்டு கைபேசியை தேடியுள்ளார். அந்த கைபேசியில் முக்கியமான அரச தரவுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஆரம்ப முயற்சியில் கைபேசியை மீட்க முடியாத நிலையில் அந்த நீர் தேக்கத்தில் இருக்கும் ஒட்டுமொத்த நீரையும் இறைக்க அந்த அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அடுத்த மூன்று நாட்களில் நீர்த் தோக்கத்தில் இருந்து 2 மில்லியனுக்கும் மேற்பட்ட லீற்றர் நீர் இறைக்கப்பட்டுள்ளது. இது குறைந்தது 1500 ஏக்கர் நிலத்தில் பயிர்ச் செய்வதற்கு போதுமான நீராகும்.

நீர் இறைக்கப்படும்போது விஷ்வாஸ் சிவப்புக் குடை ஒன்றின் கீழ் இருந்து பார்த்திருக்கும் வீடியோக்கள் சமூக ஊடகத்தில் பிரபலமடைந்துள்ளன.

இந்த நீர்த் தேக்கத்தில் உள்ள நீர் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உயர் அதிகாரியின் அனுமதியுடன் அந்த நீர் இறைக்கப்பட்டதாக விஷ்வாஸ் குறிப்பிட்டுள்ளார். இறுதியில் அந்த கைபேசி மீட்கப்பட்டபோதும் இயங்காத நிலையில் இருந்துள்ளது.

இந்நிலையில் நீர் வளத்தை வீணடித்ததாக பரவலாக விமர்சனம் எழுந்ததை அடுத்து விஷ்வாஸ் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

Mon, 05/29/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை