கிசா பிரமிட்டுக்குள் மறைக்கப்பட்ட ‘நடைக்கூடம்’ ஒன்று கண்டுபிடிப்பு

கிசாவின் பெரிய பிரமிட்டின் பிரதான நுழைவாயிலுக்கு மேலால் மறைக்கப்பட்ட உள்ளக நடைக்கூடம் ஒன்று இருப்பதை எகிப்து தொல்பொருள் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

உள்ளே செலுத்தப்பட்டு பெறப்பட்ட என்டோஸ்கோப் வீடியோவில் உள்ளே 9 மீற்றர் நீளமான மற்றும் 2.1 மீற்றர் அகலமான நடைக்கூடம் ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது. இது நுழைவாயிலைச் சுற்றியுள்ள பிரமிட்டின் எடையை மறுபகிர்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகவோ அல்லது இன்னும் கண்டுபிடிக்கப்படாத மற்றொரு அறையாகவோ இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரமிட்டுக்குள் அடர்த்தி மாற்றங்களை மியூவான் துகள்கள் ஊடுருவியது எவ்வாறு என்று ஆய்வு செய்ததன் மூலம் ஸ்கேன்பிரமீட்ஸ் திட்டத்தில் இருந்து விஞ்ஞானிகள் குழு ஒன்றால் கண்டறிய முடிந்துள்ளது. இந்தத் துகள்கள் அண்டக் கதிர்களின் துணை அம்சங்கள் என்பதோடு கற்களால் அவைகளை பகுதி அளவே உறிஞ்ச முடியும்.

செவ்ரான் கல் அமைப்பு ஒன்று இருக்கும் பகுதியில் பிரதான நுழைவாயிலுக்கு சுமார் 7 மீற்றர் மேலால் வடக்கு முகப்புக்குப் பின்னால் வெற்றி இடைவெளி ஒன்று இருப்பது கண்ணுக்கு புலப்படாதவற்றை கண்டறியும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராடார் மற்றும் அல்ட்ரா செளன்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேலும் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செவ்ரான்கள் அமைக்கப்பட்ட கற்களின் இணைப்புகளுக்கு இடையால் 6 மி.மீ அகலமான என்டோஸ்கோப் கருவி செலுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்மூலம் கண்டுபிடிக்கப்பட்ட புதிய நடைக்கூடத்தின் படங்கள் கடந்த வியாழக்கிழமை பிரமிட்டுக்கு அருகில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் காண்பிக்கப்பட்டுள்ளது. அதில் வளைந்த கூரை மற்றும் வெட்டப்பட்ட கற்களாலான சுவர்களுடன் வெற்று நடைக்கூடம் ஒன்று தெரிகிறது.

“நாம் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்வதன் மூலம், அதற்குள் என்ன இருக்கிறது அல்லது வெறுமனே ஒரு முடிவைக் கொண்ட நடைக்கூடமா என்பதை கண்டறிய முடியும்” என்று எகிப்து தொல்பொருட்களின் உச்ச சபைத் தலைவர் முஸ்தபா வாசிரி தெரிவித்துள்ளார். கி.மு 260 தொடக்கம் கி.மு 258 வரை ஆட்சியில் இருந்த கூபு அல்லது சேப்ஸ் பாரோவினால் நான்காவது வம்சத்தின்போது கிசா பீடபூமியில் கட்டப்பட்ட பெரிய பிரமிட் 146 மீற்றர் உயரமானதாகும்.

உலகின் மிகப்பெரியதும் மிகப் பழையதுமான சின்னமாக உள்ள இந்த பிரமிட் எவ்வாறு கட்டப்பட்டது என்பது பற்றி தொடர்ந்தும் மர்மம் நீடிக்கிறது.

இந்நிலையில் இந்த நடைக்கூடம் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று எகிப்து அகழ்வாராய்ச்சியாளர் சாஹி ஹவ்வாஸ் வர்ணித்துள்ளார். இது பிரமிட்டுக்குள் இன்னும் இருக்கின்ற கூபு மன்னரின் அடக்கஸ்தலத்திற்கு இட்டுச் செல்ல உதவக்கூடும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Sun, 03/05/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை