கொழும்பு இலகு ரயில் திட்டத்தை மீள ஆரம்பிக்க அரசு தயார்

- மாற்று யோசனைகளை பெற அமைச்சர் பிரசன்ன அமைச்சரவை பத்திரம்
- 16 கி.மீ. தூரம்; 16 தரிப்பிடங்கள்; 4 நிமிடங்களில் தரிப்பிடத்தை அடையும்

கொழும்பு கோட்டை - மாலபே இலகு புகையிரதத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த திட்டம் தொடர்பான மாற்று முன்மொழிவுகளை பெறுவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இந்த இலகு புகையிரதத் திட்டத்தை அமைக்க முன்மொழியப்பட்டது.

கொழும்பு - மாலபே உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் பணிபுரிவதால், இந்த புகையிரதச் சேவையின் மூலம் நேரத்தையும் பணத்தையும் மீதப்படுத்த முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

காணிகளை கையகப்படுத்திய பின்னர், இந்த திட்டத்தை 2020 இல் ஆரம்பித்து 2024 நடுப்பகுதியில் முடிக்கப்பட ஏற்பாடாகி இருந்தது.

இந்தத் திட்டத்திற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) வழங்க இருந்ததோடு, அதற்காக ஜப்பான் அரசாங்கம் 1,850 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் திட்டமிடப்பட்ட இத்திட்டம், கடந்த அரசாங்க காலத்தில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பான் அதை இரத்துச் செய்திருந்தது.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பானுக்கான கடந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின் விளைவாக இரத்துச் செய்யப்பட்ட இலகு புகையிரதத் திட்டத்தை மீள ஆரம்பிக்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது.

16 கிலோமீற்றர் நீளம் மற்றும் 16 தரிப்பிடங்களுடன் நிர்மாணிக்கப்படவிருக்கும் இந்த புகையிரத சேவையின் ஊடாக மாலபேயில் இருந்து கொழும்பு கோட்டைக்கு 30 நிமிடங்களில் பயணிக்க முடியும்.

போக்குவரத்து நெரிசல் நேரங்களில் தலா 4 நிமிடங்களுக்கு ஒருமுறையும், சாதாரண நேரங்களில் 10 நிமிடங்களுக்கும் ஒரு முறையும் புகையிரத தரிப்பிடங்களில் புகையிரதம் வரும் வகையில் இந்த புகையிரத சேவையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Wed, 03/15/2023 - 11:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை